வைஃபை ஆன் செய்ததும் விஜய் கலந்துகொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேரலை வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
இந்த நிகழ்வில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்டோரின் பேச்சை கேட்டு முடித்த பின், திருச்சியில் திருமாவின் பேட்டியையும் கேட்ட பின் வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நடந்த, விகடன் பிரசுரத்தின், ‘எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா திமுக கூட்டணியில் மீண்டும் சர்ச்சைகளை உண்டாக்கியிருக்கிறது. விஜய்யோடு திருமாவளவன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் திருமாவளவன் கலந்துகொள்வதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் அவரது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் இந்த நூல் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்.
விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் மன்னராட்சியை ஒழிக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக முடியும் என்பதற்கு முடிவு கட்ட வேண்டும்’ என்ற ரீதியில் பேசினார். இது முழுக்க முழுக்க திமுகவையும், தற்போதைய துணை முதல்வர் உதயநிதியையும் குறிவைத்து பேசப்பட்டதுதான். அதுமட்டுமல்ல, ‘இந்த விழாவில் கால சூழலால் திருமாவளவன் கலந்துகொள்ளவில்லையே தவிர, அவரது மனசாட்சி இங்கேதான் இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் ஆத்வ் அர்ஜுனா.
திமுகவை குறிப்பாக உதயநிதியை எதிர்த்துப் பேசுவது விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிதல்ல. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பத்திரிகை பேட்டியில், ‘சினிமாவில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வராகும்போது, நாற்பது வருடங்களாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் துணைமுதல்வர் ஆகக் கூடாதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். உதயநிதியை ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதத்தை உண்டாக்கியது.
அப்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசாவிடம் முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து விசிகவுக்கு உடனடியாக பதில் கொடுங்கள் என்று அறிவுறுத்த… அந்த நேரத்தில் சத்தியமங்கலத்தில் இருந்தபடியே அவசரமாக பேட்டியளித்தார் ஆ.ராசா.
‘சமூக நீதியை காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் உள்ளனர். இடதுசாரி சிந்தனையில் இருந்து, சிறிதும் வழுவாமல் திருமாவளவன் உள்ளார். இந்தச் சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை, அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அறனுக்கு, அரசியல் அறத்துக்கு ஏற்புடையது அல்ல. விசிக இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனின் ஒப்புதலோடு இதனைப் பேசியிருக்க மாட்டார். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார். விடுதலைச் சிறுத்தைகளும் இதனை ஏற்க மாட்டார்கள்
இது போன்ற குழப்பத்தை விளைவிக்கின்ற, பாஜகவிற்கு துணை போகிறார்கள் என்று எண்ணக் கூடியவர்கள் மீது திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார் ஆ.ராசா.
அதாவது உதயநிதியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்குங்கள், அல்லது குறைந்தபட்சம் துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டாவது நீக்குங்கள் என்பதுதான் திமுக கொடுத்த அழுத்தம். ஆனால் அப்போது, ‘அக்டோபர் 2 மது ஒழிப்பு மாநாட்டுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று திமுக தரப்புக்கு மெசேஜ் அனுப்பினார் திருமா. ஆனால் அப்படி எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாட்டுக்காக பல மாவட்டங்களில் கூட்டிய ஆயத்தக் கூட்டங்களில், ஆதவ் அர்ஜுனா பற்றி பெருமையாக பேசி அவரை பாராட்டினார் திருமா. அந்த மாநாட்டிலும் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இதற்கிடையில் ஸ்டாலின் தனது வருத்தத்தையும் கோபத்தையும் விசிக நிர்வாகிகள் தன்னை சந்திக்கும்போது வெளிப்படுத்தினார். இந்த சூழலில்தான், விஜய்யோடு தான் கலந்துகொள்ள இருந்த இந்த விழாவை தவிர்த்தார் திருமா.
அதேநேரம் துணை பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் அல்லாமல் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாகி என்ற அடிப்படையிலேயே ஆதவ் அர்ஜுனா விஜய்யோடு மேடையேறினார். நிகழ்ச்சி அழைப்பிதழில் ஆதவ் அர்ஜுனா பெயர் அருகே விசிக பதவி குறிப்பிடப்படவில்லை.
ஆனாலும் ஆதவ் அர்ஜுனா விசிக துணைப் பொதுச் செயலாளராக இந்த மேடையிலும் திமுக அட்டாக்கை குறிப்பாக உதயநிதி அட்டாக்கைத் தொடர்ந்தார்.
’வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் மன்னராட்சியை ஒழிக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக முடியும் என்பதற்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ் சினிமாவை ஒருவரே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்’ என்று பேசியது திமுகவினருக்கு குறிப்பாக திமுக இளைஞரணியினருக்கு கடுமையான கோபத்தை உண்டாக்கியது.
இதுகுறித்து திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘ஆதவ் அர்ஜுனாவை திமுகவுக்கு எதிராக பேசுவதற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார் திருமா. இதை ஸ்டாலினும், உதயநிதியும் உணர்ந்தே உள்ளனர். அழைப்பிதழில் கட்சி சாயம் இல்லாததால் ஆதவ் அர்ஜுனா விசிகவைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஏற்கனவே ஒரு முறை திமுக சகித்துக் கொண்டது. இனியொரு முறை திமுக சகித்துக் கொள்ளாது.
சமீபத்தில் விசிக நிர்வாகிகள் தன்னை சந்தித்தபோது முதல்வர் ஸ்டாலின், ‘சுயமரியாதை பத்தி தமிழ்நாட்டுக்கு கத்துக் கொடுத்தவங்க நாஙக. எங்களோட சுயமரியாதையையே உரசிப் பாக்குறாரா திருமா?’என்று கேட்டிருக்கிறார். அதே கோபத்தில்தான் இப்போது உதயநிதியும் இருக்கிறார்’ என்கிறார்கள்.
மேலும் அவ்விழாவில் பேசிய விஜய், ‘அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொள்ளாதற்கு கூட்டணி அழுத்தமே காரணம்’ என்று பேசினார்.
இந்நிலையில் திருச்சியில் இன்று இரவு பேட்டியளித்த திருமாவளவன், ‘விஜய் அம்பேத்கர் பற்றி பேசியது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விஜய்யோடு எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அந்த விழாவுக்கு போகாமல் தவிர்த்தது எனது சொந்த முடிவு. எந்த அழுத்தமும் இல்லை’ என்றவர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பற்றி, ‘அது அவரது சொந்தக் கருத்து. அவரிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கம் கேட்டு நிர்வாகிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார்.
திருமாவின் இந்த கருத்து திமுகவை மேலும் கோபமாக்கியிருக்கிறது. இப்படித்தான் செப்டம்பர் மாதமும் பட்டும் படாமலும் பேசினார் திருமா. இப்போது ஆதவ் அர்ஜுனா பேசியது அவரது சொந்தக் கருத்து என்று சொல்லியிருக்கிறார். இனி திமுகவில் இருந்தும் பலர் தங்களது சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”திருமாவளவன் மனசு நம்மோட தான் இருக்கு” : விஜய்யின் ’நச்’ பினிஷிங் டச்!
’2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை’ : ஆதவ் அர்ஜூனா
திமுக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய ஆதவ் அர்ஜூனா : நூல் வெளியீட்டு விழாவில் வெளியான வீடியோ!