பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பாமகவினர் இன்று (நவம்பர் 26) போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், போலீசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அதானி குழும தலைவர் கெளதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக சந்தித்துள்ளார் என்றும் இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, சென்னையில் நேற்று (நவம்பர் 25) செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் டென்ஷனான ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.
ராமதாஸ் குறித்து பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி காட்டமாக நேற்று பேட்டியளித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி, முதல்வரின் பேச்சுக்கு நாம் தகுந்த எதிர்வினையாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் நேற்று இரவு முதலே வட மாவட்டங்களின் சில பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் குதித்தனர். பாமகவின் போராட்டத்தை முறியடிக்க தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன், டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மாநகர ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள், சரக டிஐஜி, மண்டல ஐஜி ஆகியோருடன் பாதுகாப்பு முன்னெச்செரிக்கை தொடர்பான ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர் என்று மின்னம்பலத்தில் நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நேற்று இரவோடு இரவாக மாநகர, மாவட்ட போலீசாருக்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் முக்கியமான ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
அதாவது… “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் பாமகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கிறது.
இதனால் காவல் நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தங்கள் முழு பலத்தையும் திரட்டி ரோந்துப் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.
ரோந்துப் படையினர் எப்போதும் விழிப்புடனும் கையில் லத்தி, ஹெல்மெட், போலீஸ் ஷீல்டு, கண்ணீர் புகைக்குண்டு ஆகியவற்றை ரெடியாக வைத்திருக்க வேண்டும்.
வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் சேலம் கமிஷனர் ஆகியோர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.
இரவு நேரப் பேருந்து சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை பேருந்து சேவைகள் இயக்கப்பட வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும், “பாமக நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. போராட்டம் நடத்துவதற்கு முன்பாக போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும்” என்று ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து கடலூர், சேலம், கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலையில், பாமகவினர் போராட்டம் நடத்த முற்பட்டபோது அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் வெடித்துள்ள பாமக போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ஆக்ஷனில் இறங்கியுள்ளனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா!
தமிழ்நாடு போலீஸை சிறைபிடித்த புதுச்சேரி சாராயக்கடை ஊழியர்கள்! – நடந்தது என்ன?