துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம்!

Published On:

| By christopher

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 19) அறிவித்தார்.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்று கடந்த மே மாதம் தமிழக அரசிடம் 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை தமிழக சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கூடுதல் நிவாரணம்!

இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும் கேள்விகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தனது கண்டத்தை பதிவு செய்த முதல்வர், இதில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்களோ, அவர்களெல்லாம் கூண்டில் ஏற்றப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

துப்பாக்கிச் சூடு: பொய் சொல்லியிருக்கிறார் எடப்பாடி-ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுனா கார்கே

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel