“வட மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய அநீதி” : ஜிகே மணி குற்றச்சாட்டு!

Published On:

| By Minnambalam Login1

adani tn gk mani

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்ட மக்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றம் இன்று (டிசம்பர் 10) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய பெயரும் அடிபடுவதாக பாமக கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே மணி கூறினார்.

அதற்குப் பதிலளித்து எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஜி.கே.மணி உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்கள் இந்த அவையில் மட்டுமல்ல வெளியிலும் இதுபற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து “அதானி மீது சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனர். திமுக மீது குற்றம்சாட்டும் பாமகவோ, பாஜகவோ இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க தயாராக இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் பதிலை தொடர்ந்து பாமக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிகே மணி கூறுகையில் “அதானி ஸ்டாலின் சந்திப்பு குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். அதற்கு முதல்வரும் பதிலளித்தார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் மீது தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தமிழகத்தின் பெயர் உட்பட இந்தியாவின் ஐந்து மாநிலங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக 2020 ஆண்டு சூரிய ஒளி மின்சாரம் ஒரு யுனிட் ரூ.2. அதற்கு பிறகு ரூ.2.01 க்கு வாங்கப்பட்டிருக்கிறது.

2021 பிறகு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரம் ரூ.2.65 பைசா என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பது உண்மையான செய்தியா இல்லையா என்பதை அரசுதான் விளக்க வேண்டும் என்று பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதைத்தான் இன்றும் சட்டமன்றத்தில் பேசினோம்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. இரவு 2.45 முக்கால் மணிக்கு அறிவிப்பு இல்லாமல் சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டதால் வட மாவட்டங்களில் மிகப் பெரிய வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப் பட்டிருக்கிறது.

இந்த பாதிப்பை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், மத்திய அரசு குழு ஆகியோர் பார்வையிட்டனர். இதற்கு பின் வழங்கப்பட்ட நிவாரணத்தில் மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாகுபாடு என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கிறோம்.

என்ன பாகுபாடு என்றால், 2023 ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அப்போது சென்னை மக்களுக்கு ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ.6000 வழங்கப் பட்டது. பாதிக்கப்படாத அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மக்களுக்கு கூட அட்டைக்கு ரூ.6000 வழங்கப்பட்டது.

ஆனால் இந்த முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அட்டைக்கு ரூ.2000 தான் வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த பாகுபாடு?

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை பெய்ததை அடுத்து, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த மக்களுக்கு அட்டைக்கு ரூ.6000 வழங்கப்பட்டது.

ஆனால் இந்த முறை வட மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு வெறும் ரூ.2000 வழங்கப்பட்டது ஏன் என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ஒரே நாளில் 51 செ.மீ மழை பெய்தது. ஆனால் ஒருவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து அதானி விவகாரத்தில் முதல்வர் அளித்த பதில் குறித்து கேட்டதற்கு ” அதானியை முதல்வர் சந்திக்கவில்லை என்று முதல்வர் சொல்லி விட்டார். ஆனால் நியூயார்க் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கில் தமிழ்நாட்டின் பெயர் இருக்கிறது. அதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்றார்.

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் கூட்டுக்குழு விசாரணைக்கு பாமக ஆதரவு தெரிவிக்குமா என்ற கேள்விக்கு, ” நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சினையாக இருந்தாலும், நல்லது நடக்கும் போது அதை வரவேற்க தவறியதே இல்லை. இப்படிப் பட்ட முறைகேடு, தவறுகளை சுட்டிக்காட்ட தவற மாட்டோம்” என்று ஜிகே மணி பதிலளித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வாக்குறுதி 181 என்னாச்சு ஸ்டாலின்? போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது!

வினோத் கம்ப்ளி அழுத பிளாஸ் பேக்; உயிரைக் காப்பாற்றும் முனைப்பில் உலகக் கோப்பை அணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share