2,100 கோடி ஊழல்… அதானி எப்போது கைது? – மோடியை விளாசிய ராகுல்

Published On:

| By Minnambalam Login1

சூரிய மின்சார சக்தி ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், கௌதம் அதானி இன்னும் ஏன் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (நவம்பர் 21) கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் இந்திய அரசுடன் சூரிய மின்சார சக்தி விநியோகிக்க ஒப்பந்தம் செய்வதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்க திட்டம் வகுத்ததாக அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவருக்குப் பிடிவாரண்டும் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று (நவம்பர் 21) காலை டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது ” அதானி அமெரிக்கச் சட்டத்தையும் இந்தியச் சட்டத்தையும் மீறியுள்ளார் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் நமது நாட்டில் அவர் ஏன் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

நமது நாட்டில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் மத்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ரூ.2,100 கோடிக்கு ஊழல் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

அவர் குறித்து நாங்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறோம். செபி தலைவர் மாதுரி புச் விவகாரம் குறித்தும் நாங்கள் புகார் எழுப்பியிருந்தோம்.

ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இது அதானியை மோடி பாதுகாக்கிறார் என்பதையும்,  அவருடன் சேர்ந்து மோடி ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

அதானி இன்றே கைது செய்யப்பட வேண்டும், செபி(SEBI) தலைவரான மாதவி புச் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட்… அதானியின் ரியாக்ஷன் என்ன?

விசிக மீது திட்டமிட்டு அவதூறு… தொண்டர்களுக்கு திருமா அட்வைஸ்!

அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் … அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment