அதானி ஊழல் பிரச்சினையில் ராமதாஸ் திசை திருப்ப முனைகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தொழிலதிபர் அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டுக்கு வந்து அதானி யாரைச் சந்தித்தார்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், “ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.
இவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்திருந்தார். முதல்வரின் பேச்சை கண்டித்து இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ராமதாஸ் குறித்து பேசியதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் வைகோ.
இதுகுறித்து இன்று (நவம்பர் 26) அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஹிண்டன்பார்க் அறிக்கை முதல் சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்த ஊழல் மீதான நியூயார்க் நீதிமன்ற வழக்கு வரை அதானி குழுமம் செய்த அனைத்து முறைகேடுகளும் இந்திய பொருளாதாரத்தில் விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு விசாரணை குழுவுக்கு நரேந்திர மோடி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது.
தலைமை அமைச்சர் நரேந்திர மோடி முதன் முதலில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற போது, அவர் பயணித்த விமானத்திலேயே கௌதம் அதானியை உடன் அழைத்துச் சென்றார்.
அதுமட்டுமின்றி, அதானி நிறுவனத்திற்கு 6200 கோடி கடன் கொடுப்பதற்கு பரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டு ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் நாடறிந்த உண்மைகள்.
எனவே, இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தான் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
இந்தச் சூழலில் அதானி குழுமத்திற்கு நெருக்கமான பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை தொடுக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் வதந்திகளை செய்தியாக்கும் நோக்கத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி அறிக்கை விடுத்தார்.
மருத்துவர் ராமதாஸ் தலைமை அமைச்சர் மீது ஏன் குற்றச்சாட்டு முன்வைக்க வில்லை?
எதிர்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தும் ஒன்றிய அரசு, அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? ஏன் இதுகுறித்து பாமக வலியுறுத்தவில்லை?
திமுக மீதும், தமிழக அரசு மீதும் புழுதி வாரித் தூற்றும் நோக்கத்தோடு அறிக்கை கொடுத்தார்.
அது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து அறிக்கை தந்து இருக்கிறார். பொறுப்பற்ற பொய் வதந்திகளுக்கு எல்லாம் முதலமைச்சர் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை.
அதனால்தான் முதலமைச்சர் சரியான பதிலை ஒரு வரியில் சொல்லிவிட்டார்.
இந்தப் பிரச்சனையில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க பாமக தயாரா?
பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பிரச்சனையை திசை திருப்ப பாமக தலைவர் முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சி எல்லாம் பயனற்று போகும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வங்கக்கடலில் உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தாழ்த்தப்பட்ட மாணவனின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர்… பின்னணி என்ன?