அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் என்ன? நழுவிய நிர்மலா

அரசியல்

நாட்டை உலுக்கி வரும் அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 11) பதில் அளித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டென்பர்க் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் இந்தியாவில் அதானி குழுமம் அதிக அளவில் மோசடி செய்து போலியான பிம்பத்தை உருவாக்கி அதிக அளவில் கடன் பெற்றுள்ளது என்று ஆய்வுக் கட்டுரை வெளியிட்டது. இதையடுத்து உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்த அதானி, தன் நிறுவன பங்குகள் சரிவால் மிகவும் பின் தள்ளப்பட்டார்.

அதானி நிறுவனத்தின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கியிருப்பதாலும் , எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு அதிக கடன் கொடுத்திருப்பதாலும் அதானியின் சரிவால் பொதுத்துறை நிறுவனங்களும் சரிவைக் கண்டன.

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, ‘அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன உறவு?’ என்று போட்டோக்களை  எடுத்துக் காட்டி கேள்வி எழுப்பினார். ஆனாலும் பிரதமர் மோடி இதற்கு பதில் கூறவில்லை.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 11) டெல்லியில்  பட்ஜெட்டுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின்  மத்திய இயக்குநர்கள் குழுவின் வழக்கமான கூட்டத்தில் கலந்துகொண்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

“இந்தியாவின் நிதி கண்காணிப்பு அமைப்புகள் (ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை) மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே அவர்கள் நிதி கண்காணிப்பு விவகாரத்தில் வல்லவர்கள். அதனால் இந்த விவகாரத்தை நான் அவர்களிடமே விட்டுவிடுகிறேன்” என்று பதிலளித்தார்.

அதானி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நிதியமைச்சகமும், செபி அமைப்பும் பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலைமையை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாமா என்றும் நீதிமன்றம் கேட்டது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்.

அப்போது நிர்மலா சீதாராமன்,  “நான் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை உங்களிடம் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது” என்று பதிலளித்தார்.

அதானி விவகாரம் தொடர்பாக பட்டும் படாமல் பதிலளித்துள்ளார் நிர்மலா சீதாராமன். மேலும் இந்த விவகாரத்தின் ஒட்டுமொத்த பொறுப்பையும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் தள்ளிவிட்டுள்ளார் என்கிறார்கள் விமர்சகர்கள். அதானி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் 13 ஆம் தேதி திங்கள் கிழமை நிதியமைச்சகத்தின் பதில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

வேந்தன்

விஜயகாந்தை சந்திக்காதது ஏன்? – வாகை சந்திரசேகர் உருக்கம்

ஈரோடு கிழக்கு: ஸ்டாலினுடன் மேடை ஏறுவாரா கமல்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *