அதானி குழும கடன் விவரத்தை வெளியிட முடியாது என்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாகப் பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதால், அந்நிறுவனங்களில் சேமிப்பு வைத்துள்ள பொதுமக்களின் பணத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா எனக் கேள்விகளும் எழுந்தன.
இதனால் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் முதல் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை. இதனால் கடும் அமளி, எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு மத்தியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று (மார்ச் 13) இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அதானி குழு விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி எம்.பி. தீபக் பாய்ஜ் அதானி குழுமத்துக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் எவ்வளவு எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
“அதானி குழும நிறுவனங்களில் கடன் விவரங்களை வெளியிட முடியாது. ஆர்டிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது” என்று கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
பிரியா