காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் சமயத்தில் அம்பானி, அதானி பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார் என்று மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் எதிர்வினையாற்றியுள்ளனர்.
பிரதமர் மோடி இன்று (மே 8) தெலங்கானா மாநிலம், கரிம்நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்பானி, அதானியைப் பற்றி விமர்சிப்பதை ராகுல் காந்தி நிறுத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
https://twitter.com/kharge/status/1788135577977868505
இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் வலைதள பதிவில், ”காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனிமேல் நண்பர்கள் அல்ல,
மூன்று கட்ட தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் மோடி தற்போது தனது சொந்த நண்பர்களையே விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
மோடியின் நாற்காலி ஆட்டம் காண துவங்கிவிட்டது என்பதையே அவரது பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றன. இதனை தான் தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Jairam_Ramesh/status/1788125105370914982
ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,200 கோடி ரூபாய் பாஜகவுக்கு நன்கொடையாக வசூலித்த பிரதமர் மோடி, இன்றைக்கு காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்.
பிரதமர் மோடி தனது பெருமுதலாளி நண்பர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களையும், உரிமைகளையும் வாரி வழங்கியுள்ளார்.
இன்றைக்கு 21 இந்திய கோடீஸ்வரர்களிடம் 70 கோடி இந்தியர்களின் சொத்து இருக்கிறது என்றால், அதற்கு பிரதமர் மோடியும் அவரது கொள்கைகளும் தான் காரணமாகும்,
அதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 28, 2023 முதல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் துவங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு… அதாவது ஏப்ரல் 23-ஆம் தேதியும், கடந்த வாரம் மே 3-ஆம் தேதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.
கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ராகுல் காந்தி தனது உரைகளில் அதானியை 103 முறையும், அம்பானியை 30 முறையும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான அதானி முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
மோடியின் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது. அவர் தனது சொந்த நிழலைக் கூட பார்த்து இப்போது பயப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்ட்ராங் ரூமில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் : தேர்தல் ஆணையம்!