பிரதமர் மோடி வெளிநாடு சென்றாலே அதானிக்கு கடன் கிடைக்கிறது, ஒப்பந்தம் கிடைக்கிறது என்று மக்களவையில் தெரிவித்த ராகுல் காந்தி, அதானிக்கும் மோடிக்கும் என்னதான் தொடர்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதன் பின் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தொடரில் மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம், அதானி குழும விவகாரம் ஆகியவை குறித்து பேசினார்.
அப்போது அவர், “இந்திய ஒற்றுமை பயணத்தின் போது மக்கள் பிரச்சினைகள் பற்றி கேட்க முடிந்தது. அவர்களின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பேசினோம்.
இளைஞர்களிடம் நாட்டில் வேலைவாய்ப்பு பற்றி கேட்டோம். அவர்களில் பலர் வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். இல்லையேல் ஊபர் காரை ஓட்டுவது என அவர்களின் கல்வித் தகுதிக்கு இல்லாத ஒரு வேலையை செய்வதாக தெரிவித்தனர்.
விவசாயிகளிடம் பேசும் போது, பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பணமெல்லாம் கிடைக்காது என்று தெரிவித்தனர். தங்கள் நிலமெல்லாம் பறிக்கப்படுவதாக வேதனையுடன் கூறினர்.
4 ஆண்டுகளில் ராணுவத்திலிருந்து வெளியேறும் அக்னிவீர் திட்டம் குறித்தும் பேசினார்கள். இந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் உள் துறை அமைச்சகத்திடம் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. ராணுவத்தில் இருந்து அல்ல என முன்னாள் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதானி குழுமம் தற்போது 8-10 துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 2014ல் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குழுமத்தின் மதிப்பு இப்போது 140 பில்லியன் டாலராக உயர்ந்தது எப்படி என்று இளைஞர்கள் கேட்கிறார்கள்.
தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, நாடு முழுவதும், ‘அதானி, அதானி, அதானி’… தான். அதானி எந்த தொழிலும் இறங்குகிறார். ஆனால் தோல்வி அடைவதில்லையே என மக்கள் கேட்கிறார்கள்.
2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, விமானப் போக்குவரத்து துறையில் அனுபவம் உள்ள ஒருவருக்கு மட்டுமே, விமான நிலையங்களை மேம்படுத்தும் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற விதியை மாற்றி, 6 விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவில் மிக லாபகரமான விமான நிலையம் மும்பை விமான நிலையம். அதை ஜி.வி.கே. நிறுவனத்திடம் இருந்து சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து அபகரித்து அதானியிடம் கொடுத்துவிட்டது மத்திய அரசு. இது இந்த நாட்டின் பிரதமர் மோடியால் அதானிக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதி.
2014ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 609வது இடத்தில் இருந்தார். பிரதமர் மோடி நட்பின் விளைவு, உலக அளவில் இந்தப் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நடைப்பயணத்தின்போது, எல்ஐசி மற்றும் வங்கிகளின் பணத்தை அரசு ஏன் அதானி போன்ற நிலையற்ற வணிகத்தில் முதலீடு செய்கிறது என்று மக்கள் கேட்டனர். ஆனால் அரசாங்கம் இதற்கான பதிலை கூற மறுக்கிறது. ஏன் மறுக்கிறது” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து , பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், அதானியுடன் எத்தனை முறை (வெளிநாட்டுப் பயணத்தில்) ஒன்றாகப் பயணம் செய்தீர்கள்? உங்களின் வெளிநாட்டுப் பயணத்தில் அதானி எத்தனை முறை உங்களுடன் இணைந்துகொண்டார்?,
நீங்கள் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு அங்குவைத்து அவர் உங்களை எத்தனை முறை அணுகியிருக்கிறார்?,
அதானி எத்தனை முறை வெளிநாட்டில் ஒப்பந்தம் எடுத்தார்?. கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்? என அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினார்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்கானதாக மாற்றப்பட்டது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதானி குழுமம் டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். உடனே அதானி குழுமத்துக்கு ஒப்பந்தம் கிடைக்கிறது.
அதுபோன்று ஆஸ்திரேலியா சென்றார். உடனே எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் கடன் வழங்குகிறது. மோடி வங்கதேசம் சென்றார். உடனே வங்கதேச ஒப்பந்தங்கள் அதானிக்கு கிடைக்கிறது.
அப்படி பார்த்தால் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது பாஜக எம்.பி.க்கள் அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.
பிரியா
ஈரோடு கிழக்கு தொகுதி: வேட்பு மனு தாக்கல் நிறைவு!
விஜய்யின் லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகுகிறாரா?