நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று (நவம்பர்14) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3ஆம் தேதி பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறாகப் பேசியதால் திமுக, பாஜக எனப் பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. இதனையடுத்து தனது பேச்சுக்குக் கஸ்தூரி மன்னிப்பு கோரினார்.
இதற்கிடையே கஸ்தூரிக்கு எதிராகச் சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக மதுரை திருநகரில் ’தமிழக நாயுடு மகாஜன சங்கம்’ சார்பில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலைமறைவான கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ” கஸ்தூரி எதற்குக் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களையும் ராஜாக்களின் அந்தப்புரத்தையும் சேர்த்து வைத்துப் பேசினார்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கஸ்தூரி தரப்பில், ”ஒட்டுமொத்த தெலுங்கு சமூகத்தைப் பற்றிப் பேசவில்லை. குறிப்பிட்ட நபர்களைப் பற்றித்தான் பேசினார். பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் இதற்குக் கஸ்தூரியை காவல்துறை கைது செய்யத் தேவை இல்லை” என பதில் அளிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி “மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருந்த காலகட்டத்திலிருந்தே இங்கு வசித்து வரும் மக்களை வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்று கூற முடியாது. படித்தவர் மற்றும் சமூக ஆர்வலர் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் மனுதாரர், எப்படி அப்படிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்கலாம்?
தான் பேசிய காணொளியைப் பார்க்கும் போது அது சமூகத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று கஸ்தூரிக்குத் தெரியவில்லையா?
கஸ்தூரி மன்னிப்பு கேட்ட காணொளியில், அவர் தான் பேசியதை நியாயப்படுத்துவதாகத் தான் தெரிகிறது” என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் ” கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்கப்படக்கூடாது. அவர் சமூகத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்.” என்றார்.
இதற்கு நீதிபதி, “இந்த குற்றத்திற்குக் காவல் விசாரணை தேவைப்படுமா? என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆமாம் என்று அவர் பதிலளித்தார்.
இதனை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கஸ்தூரியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து தலைமறைவாக உள்ள கஸ்தூரியை கைது செய்ய ஏற்கெனவே 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
எதற்கெடுத்தாலும் தூக்கு போடும் ஈரானில் இப்படி ஒரு சம்பவமா? உயிருக்கு பயம் இல்லையா?
’நான் நலமுடன் இருக்கிறேன்’ : வீடியோவில் மருத்துவர் பாலாஜி