வீட்டையும் வியூகத்தையும் மாற்றிய விஜய்
வேந்தன்
ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் திருமணம் என்பது முக்கியமான காலகட்டம். திருமணத்துக்கு முன்பு வரை அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் என்று இருக்கும் குடும்பம்… திருமணத்துக்குப் பின் மனைவி, குழந்தை, மாமனார், மாமியார் என்று விரிவடையத் தொடங்கும்.
இதை பலர் விரிவாக்கமாக எடுத்துக் கொள்கிறார்கள். பலர் திருமணத்துக்கு முன்பு இருக்கும் குடும்பத்துக்கும், திருமணத்துக்கு பின் வரும் குடும்பத்துக்கும் இடையே இடைவெளியை உண்டாக்கிக் தனித்தனி என்றாக்கிக்கொள்கிறார்கள். அதுவரை இருந்த குடும்பத்தோடு புதிய குடும்பமும் கலந்து மகிழ்வது ஒருவகை. திருமணமானதும் தான், மனைவி, குழந்தை என தனிக் குடும்பம் என்று திசை திரும்புவது இன்னொருவகை.
விஜய் என்னதான் திரைவானில் ஜொலிக்கின்ற நட்சத்திரமாக இருந்தாலும் அவர் வீட்டில் அவர் ஒரு மகன்தான். திருமணத்துக்குப் பின் மனைவிக்குக் கணவர்தான். வீட்டுக்கு வீட்டு வாசப்படி என்பதுபோல விஜய் வீட்டுக்கும் வாசப்படி உண்டு.
1999ஆம் ஆண்டு விஜய்யின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. லண்டனைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை மணந்தார். திருமணம் நடந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யின் அணுகுமுறையில் மாற்றங்கள் தெரிந்தன. மெல்ல மெல்ல விஜய் தன் தாய் தந்தையரான ஷோபா சந்திரசேகரோடு சாலிகிராமம் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குக் குடிபோனார்.
தான் சென்னைக்கு எப்படி வந்தேன், எப்படி முன்னேறினேன் என்பதன் அடையாளமாக எஸ்.ஏ.சந்திரசேகர் வைத்திருந்த டிரங்கு பெட்டியை வாசலிலேயே வைத்திருப்பாரே… அந்த வீட்டை விட்டு விஜய் தன் திருமணத்துக்குப் பின் அடையாறில் ஒரு புதிய வீட்டில் குடியேறினார். தமிழகத்தில் குப்பனும் சுப்பனும், ராமசாமியும் பெரியசாமியும், ரமேஷும் சுரேஷும், அபுவும், அப்துல்லாவும், டேவிட்டும் ஆரோக்கியமும் என்று மதம் சாதி கடந்து எத்தனையோ பேர் திருமணத்துக்குப் பின் தனிக் குடித்தனம் போகிறார்கள். அப்படித்தான் விஜய்யும் என்று கருதிக் கொள்ளலாம்.
ஆனால், அந்த டிரங்கு பெட்டி படிப்பினைகளில் இருந்தும், தன் மேல் அழுத்தமாகப் படிந்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ற பிம்பத்தில் இருந்தும் தொழில் ரீதியாக தன்னை விடுவித்துக்கொள்ள விஜய் நினைத்திருக்கலாம்.
அதனாலோ என்னவோ சாலிகிராமம் வீட்டில் இருந்து தன் முகவரியை அடையாறுக்கு மாற்றினார் விஜய். அப்போது விஜய் தம்பதியராக குடியேறிய வீடு அவரது ஞானத் தந்தையான சேவியர் பிரிட்டோவின் பங்களா. இதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே இடைவெளியை ஏற்படுத்திய நிகழ்வு.
விஜய்க்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வெறும் அப்பாவாக மட்டுமல்ல… ஒரு நாளைய தீர்ப்பு, ஒரு செந்தூரபாண்டிக்குப் பிறகு விஜய் தன் பாதையை தானே பார்த்துக் கொள்வார் என்று விஜய் மீது நம்பிக்கை இருந்தாலும் விஜய்யின் ஒவ்வொரு படமும் எஸ்.ஏ.சி. என்ற ரேடாரில் இருந்து தப்பிக்க முடியாது.
விஜய்யின் சூப்பர் டூப்பர் ஹீரோவாக வசூல் மன்னனாக மாறிய பிறகும் அவரது படங்கள் ஒவ்வொன்றின் கதையை முதலில் கேட்பது எஸ்.ஏ.சி.தான். அவருக்கு திருப்தி அளித்தால்தான் அடுத்து விஜய் கவனத்துக்கே போகும். இதனால் விஜய் பல ஹிட்டுகளை அடைந்திருக்கிறார். பல தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். சில கிரீடங்களை விஜய் அணிந்திருக்கிறார், சில கிரீடங்களை இழந்திருக்கிறார்.
கில்லி கதையை முதலில் கேட்டு அதை ஒகே செய்து, ‘இது உனக்கு திருப்புமுனையாகும்’ என்று சொன்னது எஸ்.ஏ.சி.தான். நாடோடிகள் போன்ற ஹிட் படத்தின் கதையைக் கேட்டு இது விஜய்க்கு சரியாக இருக்காது என்று திருப்பி அனுப்பியதும் எஸ்.ஏ.சி.தான்.
‘உன்னால் உன்னால் அடைந்தது பாதி. உன்னால் உன்னால் இழந்தது மீதி’ என்று தக்கத் தய்யா பாடலில் வைரமுத்துவின் வரி வருமே. அதுபோலத்தான் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் இருக்கும் பிணைப்பு.
விஜய் வீடு மாறினாலும் தன் மகன் என்ற அணுகுமுறையில் எஸ்.ஏ.சி மாற்றம் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் வீட்டை மாற்றிய விஜய் தன் வியூகத்தையும் மாற்றினார்.
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 8]