ஞானத்தந்தையின் பந்தம்!
வேந்தன்
செந்தூரப்பாண்டியில் இருந்து மாஸ்டர் வரைக்கும் தொட்டுத் தொடருகிறது விஜய் – சேவியர் பிரிட்டோ உறவு.
பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை எஸ்.ஏ.சியோடு அவ்வப்போது முரண்பட்டு வந்த நடிகர் விஜய், அண்மையில் தந்தையை ஒதுக்கியே வைத்துவிட்டார். ஆனால், விஜய்யின் ஞானப் பெற்றோராக மத ரீதியாக வரித்துக்கொண்ட பிரிட்டோவுடன் இன்னமும் உறவிலும் நட்பிலுமாக இருக்கிறார். பிரிட்டோவை, ‘அங்கிள்’ என்றே அழைப்பார் விஜய். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினர், எஸ்.ஏ.சியின் தங்கையின் கணவர்தான் பிரிட்டோ.
பொதுவாக ஞானத்தந்தை அந்தஸ்துக்கு உறவினர்களில் நல்ல நிலையில் இருப்பவரைதான் பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் எஸ்.ஏ.சியும் தன் மகன் விஜய்க்கான ஞானத்தந்தையாக பிரிட்டோவைத் தேர்ந்தெடுத்தார்.
1990களிலேயே விஜய்யின் செந்தூரப்பாண்டி, ரசிகன் படங்களைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ ஒரு பரபரப்பான பிசினஸ் காந்தம். 1984 முதல் இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இன்னமும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருப்பவர்.
எந்த அளவு பிசினஸ் காந்தம் என்றால் இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் விமான சரக்கு நிலையம் அமைக்கும் அளவுக்கு பெரும் தனக்காரர் பிரிட்டோ. சென்னை விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து நெரிசலால், பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஹைதராபாத், பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் லாஜிஸ்டிக் நிறுவனம் நடத்திக்கொண்டிருந்த சேவியர் பிரிட்டோ இந்த சூழலைப் பயன்படுத்தி சென்னையிலேயே தனியார் விமான சரக்கு நிலையத்தைத் தொடங்கினார்.
இந்த விமான சரக்கு நிலையத்தில் ஆன்லைன் தாக்கல், மதிப்பீடு, ஆய்வு மற்றும் விநியோகம் உள்ளிட்ட முழு முறைகளையும் சுங்க அதிகாரிகள் கவனிக்கிறார்கள். நெரிசல் மற்றும் திறமையற்ற கையாளுதல் காரணமாக சரக்கு வாடிக்கையாளர்கள் பலர் வெளிமாநில விமான நிலையங்களுக்குச் சென்றுவிட்டனர். தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதுபோன்ற சிக்கல்களைச் சமாளிப்பதே இன்டெவ் ஃப்ரைட் ஸ்டேஷன்’ நோக்கம்” என்று எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இதழுக்குப் பேட்டியளித்திருக்கிறார் சேவியர் பிரிட்டோ. 2015இல்தான் இந்த தனியார் விமான சரக்கு நிலையத்தைத் தொடங்கினார் சேவியர்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரிட்டோ தனக்கும் விஜய்க்குமான நெடுநாள் பந்தம் பற்றிப் பேசினார்.
“எந்த நிலைக்கு சென்றாலும் தனது பழைய நிலையை மறக்காதவர் என் தம்பி தளபதி. சின்ன புன்னகையிலேயே எல்லா பதிலையும் அளிப்பார். தேனீக்களிடம், ‘நீ இப்படி கஷ்டப்பட்டு தேனை உருவாக்குகிறாயே. ஆனால் அதை மனிதர்கள் திருவிடுகிறார்களே. அதைப் பற்றி கவலைப்பட மாட்டாயா’ என்று கேட்டார்கள். அதற்கு தேனி, ‘தேனை வேண்டுமானால் திருடலாம். ஆனால் தேன் உருவாக்கும் முறையை அவர்களால் திருட முடியாது’ என்று சொன்னது. அப்படி யாராலும் திருடப்பட முடியாத பேஷன் கொண்டவர் விஜய். என் திருமணத்தை நடத்தி வைத்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை ஆளாக்கிய இயேசு சபையினருக்கும் என் நன்றிகள்” என்று பேசி தான் விஜய்யின் ஞானத்தந்தை என்பதை நிரூபித்தார் பிரிட்டோ.
அந்தப் பேச்சிலேயே தான் நாளைய தீர்ப்பு விழாவிலும், “ஒரு நாள் இந்த விஜய் சூப்பர் ஹீரோவாக வருவார்” என்று பேசியதைக் குறிப்பிட்டிருந்தார் சேவியர் பிரிட்டோ.
விஜய்யோடு சுமார் முப்பது வருடங்கள் தொடர்பில் இருக்கும் சேவியர் பிரிட்டோவின் பெயரை அதற்கு முன் பெரிதாக யாருக்கும் தெரியாது. விஜய்யை மையமாக வைத்து நடந்த வருமான வரித்துறை சோதனைகளின்போதுதான் அவரது பெயர் அதிகம் பேசப்பட்டது.
விஜய்க்கு பிரிட்டோ ஞானத்தந்தை மட்டும்தானா என்ற சர்ச்சைக்கு அவரே பதிலும் அளித்திருக்கிறார்
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]