எஸ்.ஏ.சி.-விஜய்: இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு! மினி தொடர்-7

அரசியல் சிறப்புக் கட்டுரை

விஜய்யின் பெற்றோரும், ஞானப் பெற்றோரும்!

வேந்தன்

எஸ்.ஏ. சந்திரசேகர் மீது இருந்த மரியாதையால், பாசத்தால், நட்பால் ஒரே ஒரு படத்தில் மட்டுமே தலைகாட்டியிருந்த அவரது மகன் விஜய்யோடு… அப்போதைய கோடம்பாக்கத்தின் ஆக்‌ஷன் கிங் விஜயகாந்த் இணைந்து நடித்தார்.

அந்த செந்தூர பாண்டி படத்தின் தயாரிப்பாளராக சேவியர் பிரிட்டோ என்பவர் இருந்தார். சேவியர் பிரிட்டோ என்பவர் யாரென்றால்…. விஜய்யின் ஞானப் பெற்றோர். கத்தோலிக்க கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தன் பெற்றோருக்கு இணையான முக்கியத்துவத்தை ஞானப் பெற்றோருக்கு அளிப்பார்கள். அளிக்க வேண்டும் என்பது கட்டளை, அதுவே சாசனம்.

இயேசு தனது 30 வயதுகளில் ஜோர்டான் நதியில் குளித்து தனது பாவங்களைத் தொலைத்தார். அவருக்கு யோவான் திருமுழுக்கு செய்து வைத்தார். திருமுழுக்கு எனப்படும் ஞான ஸ்நானம் செய்து வைத்தால்தான் அந்த பிள்ளை முழுமையான கிறிஸ்துவனாக முழுமையாக, கடவுளின் பிள்ளையாக மாறும், அவரது பாவத்தை எல்லாம் விலக்கிவிட்டு பரிசுத்தமானவராக கடவுள் ஏற்றுக்கொள்வார். இப்படி ஒரு முக்கியமான சடங்கை செய்து வைத்து ஞானத்தை போதிப்பவர்கள்தான் ஞானப் பெற்றோர்கள்.

உலகம் முழுவதிலும் மதங்கள் கிட்டத்தட்ட ஒரே அடிப்படையில்தான் உருவாகின்றன. இந்து மதத்தில் கங்கை, காவிரி புனித நீராடல்கள் பின்பற்றப்படுகின்றன. புனித நீர் நிலைகளில் புனித காலத்தில் நீராடுவதன் மூலம் தங்கள் பாவங்களைத் தொலைப்பதாக கருதப்படுகிறது. இதைத்தான் கிறிஸ்துவ மதத்தில் அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்காடினார்.

இதேபோல ஒவ்வொரு கிறிஸ்துவனும் புனித நீராட வேண்டும். இப்போது இந்த திருமுழுக்கு என்பது நடைமுறை சிக்கல்களால் திருத்தெளிப்பு என மருவிவிட்டது. அதாவது நீரில் மூழ்கி எழாமல், நீர்த் துளிகளை தலையில் தெளித்துவிடுவார்கள்.

இந்த புனித நீராட்டலுக்குப் பின் அவர்களுக்கு சமய ரீதியாக கட்டுப்பாடுகளையும், வரையறைகளையும் சொல்லிக் கொடுப்பவர்கள்தான் ஞானப் பெற்றோர்கள். கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஞானப்பெற்றோர் உண்டு. அவர்கள் மூலமாகத்தான் அந்த குழந்தை கடவுளின் குழந்தையாக மாற வேண்டும்.

அந்த கிறித்துவக் குழந்தையின் பிறப்புப் பெற்றோருக்கு ஏதேனும் ஆகிவிட்டதென்றால், ஞானப் பெற்றோர்தான் பாதுகாக்க வேண்டும். அந்த கிறித்துவ குழந்தையை நல்ல விதமாக வளர்த்து அவருக்கு மதக் கட்டுப்பாடுகளை, புனித வரையறைகளை போதிக்க வேண்டிய பொறுப்பு ஞானப் பெற்றோருடையது. அவரை ஒழுங்காக வளர்க்க வேண்டிய கடமை ஞானப் பெற்றோருக்கே உண்டு.

இப்படித்தான் விஜய்க்கும் சிறு வயதாக இருக்கும்போது ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டபோது, ஞானப் பெற்றோராக இருந்தவர் சேவியர் பிரிட்டோ. இந்த சேவியர் பிரிட்டோதான் செந்தூர பாண்டியின் தயாரிப்பாளர். அதுமட்டுமல்ல, இதோ இப்போது வெளியாகத் தயாராக இருக்கிறதே மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் ஞானப் பெற்றோரான சேவியர் பிரிட்டோதான்.

செந்தூர பாண்டியில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்குனராக மட்டுமல்ல… வொர்க்கிங் பார்ட்னர் ஆகவும் இருக்கிறார்.விஜயகாந்த் கால்ஷீட் உள்ளிட்ட அனைத்து கால்ஷீட்டுகளையும் கூட எஸ்.ஏ.சி,தான் பார்த்துக் கொண்டார். விஜயகாந்துக்கு கௌதமி ஜோடி, விஜய்க்கு சங்கவி ஜோடி. செந்தூரபாண்டி சரித்திரம் படைத்தது. ஹெவிஹிட் ஆனது. தமிழ் சினிமாவில் விஜய் என்றொரு பையன் வந்திருக்கிறான் என்ற விசிட்டிங் கார்டை கொடுத்தது செந்தூர பாண்டிதான். அப்போது தொடங்கி இப்போது வரை விஜய்யுடன் இருக்கிறார் சேவியர் பிரிட்டோ.

விஜய் தன்னையே ‘தயாரித்த’எஸ்.ஏ.சி.யையே எதிர்த்துக் கொண்டு, தன் பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞானப் பெற்றோரான சேவியர் பிரிட்டோவை தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறாரே…

பெற்றோருக்கும் ஞானப் பெற்றோருக்கும் இடையே ஏன் இத்தனை வித்தியாசம் பார்க்கிறார் விஜய்?

(நாளை தொடரும்)actor vijay sa chandrasekar party clash 7

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *