விஜயகாந்த் வெளிச்சத்தில் விஜய்
வேந்தன்
ராஜதுரை மூலம் ராவுத்தர் பிலிம்ஸுக்கு நட்டமில்லை. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் தன் அப்போதைய பொருளாதாரத்தை நிமிர்த்த போதுமான தெம்பு கிடைத்தது. ஆனால் அதோடு எஸ்.ஏ.சி விட்டுவிடவில்லை.
கிராமங்களில் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அதேபோல அப்போது சினிமாவில் வர்த்தக வாசனையும், ஜனரஞ்சக வாசனையும், சி சென்டர் வரை பலமாக வீசக் கூடிய பூவாக இருந்தார் விஜயகாந்த். விஜய்யைப் பொறுத்தவரை அப்போதுதான் நார். எந்தப் பூவும் தீண்டாத நார். அதுவும் எஸ்.ஏ.சி என்ற வாழை மரத்தில் இருந்து உரித்து வைத்த நார்.
விஜயகாந்த் என்ற பூவுடன் விஜய் என்ற நாரை சேர்த்துவிட்டால் நாரும் மணக்கும் என்று கணக்குப் போட்டார் எஸ்.ஏ.சி. ஏற்கனவே ராவுத்தரிடம் சொன்ன விஷயத்தை ராஜதுரை படத்துக்குப் பின்னர் விஜயகாந்திடமும் கூறினார் எஸ்.ஏ.சி.
எப்படி தெரியுமா? விஜயகாந்த் திரையுலகத்துக்கு வந்து நாற்பதாம் ஆண்டு விழாவில் எஸ்.ஏ.சி. சந்திரசேகர் எவ்வித ஒப்பனையும் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகளாகக் கொட்டினார்.
“நட்புன்னா என்ன? அது விஜயகாந்த். அன்புன்னா அது விஜயகாந்த். மரியாதைக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜயகாந்த், நன்றிக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜயகாந்த். மொத்தத்துல மனிதன் என்று சொன்னால் அது விஜயகாந்த் தான்” என்று நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர், அந்த பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“என் வாழ்க்கையில இருந்தே இதுக்கு உதாரணம் சொல்ல முடியும். என் மகன் விஜய் இன்று எப்படி இருக்கிறார்னு உங்க எல்லாருக்குமே தெரியும். என் மகன் நடிகராகணும்னு ஆசைப்பட்டார். நாளைய தீர்ப்புனு படம் எடுத்தேன். அது சரியா ஓடலை, அடுத்து அவரை எப்படியாவது நடிகராக்கிடணும். விஜயகாந்த்தோட சேர்ந்து நடிச்சா நடிகராயிடுவாருன்னு ஆசையில விஜயகாந்துக்கு போன் பண்ணேன்.
’என்ன சார் சொல்லுங்க சார்’னு கேட்டார். அஞ்சு நிமிசத்துல வீட்டுக்கு வர்றேனு சொன்னேன்.
ரெண்டு நிமிஷத்துல அவர் என் வீட்டுக்கு வந்துட்டாரு. (இருவரது வீடுகளும் சாலிகிராமத்தில் பக்கத்து பக்கத்து தெரு)
அதுவரைக்கும் அவர் 75 படத்துல நடிச்சிருந்தார். அவருக்குனு அன்னிக்கு பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனாலும் என் வீடு தேடி வந்தவர், ‘என்ன விஷயம் சொல்லுங்க, நீங்க வரணுமா. அதுக்குதான் நான் வந்துட்டேன்’ என்றார்.
’என் மகன் விஜய் உங்களோட நடிக்கணும்னு ஆசைப்படறான். அவன் ஹீரோவா இருந்து நீங்க கெஸ்ட் ரோல் பண்ணா, அவனுக்கு நல்லா இருக்கும்’னு கேட்டேன்.
விஜயகாந்த்தோட பதில் என்ன தெரியுமா? ‘எப்ப சார்?’னு கேட்டாரு.
நீங்க எப்ப சொல்றீங்களோன்னு நான் சொல்ல, ‘சார், நீங்க எப்போனு சொல்லுங்க. உடனே பண்ணிடலாம்’ என்றார் விஜயகாந்த்.
அவரும் நானும் சேர்ந்து 17 படம் வேலை செய்திருக்கிறோம். இப்பவும் வீட்டுக்குப் போனா, அவரோட மனைவிகிட்ட ‘என்னோட டைரக்டர்’ வந்திருக்காருனுதான் சொல்லுவாரு.
விஜய்யின் இன்றைய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டதில் விஜிக்கு பெரும் பங்கு இருக்கு” என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னபோது அந்த இடமே நெகிழ்ந்துபோனது.
தமிழக சினிமாவில் ஏ.பி.சி. என்று மூன்று தளங்கள் இருக்கின்றன. ஏ சென்டர் என்பது மெட்ரோபாலிட்டன் மேல்தட்டு ரசிகர்களுக்கானது. பி சென்டர் என்பது நடுத்தர மக்களின் தளம். சி சென்டர் என்பது பக்கா லோக்கல் வரைக்கும் சென்று சேர்வது. இதில் விஜயகாந்த் பி,சி என இரு சென்டர்களிலும் அஸ்திவாரம் போட்டு அசைக்க முடியாத இடத்தில் உட்கார்ந்ந்திருந்த நடிகர்.
அவர் தனது குரு, தனது டைரக்டர், தனக்கு 17 படங்களைக் கொடுத்து ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்த டைரக்டர் அந்த நன்றிக்காகத்தான் விஜய்யுடன் சேர்ந்து செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்தார் விஜயகாந்த்.
எஸ்.ஏ.சி. சுயமரியாதை மிக்கவர். அடுத்தவரிடம் கேட்டுப் பெறுதலை விரும்பாத சுபாவமுள்ளவர், எஸ்.ஏ.சி தன் சுபாவப்படி நடந்திருந்தால் தனது மகனுக்காக விஜயகாந்திடம் கேட்டிருக்க மாட்டார். எஸ்.ஏ.சி கேட்க வில்லையென்றால் விஜயகாந்த் செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜய்யோடு நடித்திருக்க மாட்டார். இப்படி பல விஷயங்கள் நடக்காமல் போயிருக்கும்.
ஆனால் அன்று செந்தூரபாண்டி 1993இல் வெளிவந்தது. வெற்றி பெற்றது. விஜயகாந்தின் வெளிச்சத்தில் விஜய் என்ற பெயர் பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தது. எஸ்.ஏ.சி தனக்காக செய்யாமல் தன் மகனுக்காக செய்த முயற்சிகளில் முதல் வெற்றி பெற்றார்.
இந்த செந்தூரபாண்டி படத்தில் சேவியர் பிரிட்டோ என்ற பெயருக்கும் ஒரு இடம் இருந்தது.
மாஸ்டர் படம் வரை தொடரும் இந்த சேவியர் பிரிட்டோ யார் என தெரிகிறதா?
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]