விஜயகாந்த் கொடுத்த முகவரி
வேந்தன்
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், மகன் விஜய்க்குமான இன்றைய வழக்கு பற்றி நாம் விவாதித்து வரும் இந்தத் தொடரைப் படித்துவிட்டு திரையுலகப் பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் போன் போட்டு ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“இப்ப மட்டும் விஜயகாந்த் பூரண ஆரோக்கியத்தோட இருந்தாருன்னா… வீட்ல இருந்து வண்டிய எடுத்துக்கிட்டு விஜய் வீட்டுக்கே போயி, ‘தம்பீ…உனக்காக உங்க அப்பா தன் சுபாவத்தையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு எவ்வளவு இறங்கிப் போயி முயற்சி பண்ணினாருன்னு உனக்குத் தெரியுமா?’னு உரிமையோட சட்டையைப் பிடிச்சிருப்பாரு. ஏன்னா விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில நடக்குற இந்தப் பிரச்சினை அவரை அவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும்” என்று தன் யூகத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இது யூகமல்ல; உண்மைதான். நட்புக்கு மரியாதை கொடுப்பதில் விஜயகாந்துக்கு நிகர் தமிழ் சினிமாவில் யாருமில்லை என்பது அனைவரும் அறிந்தது.
விஜயகாந்தின் ஆரம்ப காலங்களில் அவருக்கு வெற்றிப்படிக் கட்டுகளில் ஏற உறுதுணையாக இருந்தது எஸ்.ஏ.சந்திரசேகரும், அவர் இயக்கிய படங்களும்தான். விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ஹீரோ – இயக்குநராக 17 படங்கள் செய்திருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட அனைத்துமே வெற்றிப்படங்கள்தாம். விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒருவர் சட்டையை ஒருவர் போட்டுக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமான நண்பர்கள்.
விஜயகாந்தின் ஐம்பதாவது படமான ‘சாட்சி’ பி.எஸ்.வீரப்பா கம்பெனி தயாரிப்பில் எஸ்.ஏ.சி இயக்கியது. சூப்பர் ஹிட்டானது அந்தப் படம். இப்படி விஜயகாந்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத நபராக மாறியவர் எஸ்.ஏ.சி.
நாளைய தீர்ப்பு என்ற ஆக்ஷன் படத்தை மகன் விஜய்யை வைத்து எடுத்தார் சந்திரசேகர். அது சரியாகப் போகவில்லை. நல்ல கதை. மாணவர்களே சேர்ந்து பத்திரிகை நடத்துகிறார்கள். அந்த பத்திரிகையில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரைப் பற்றி தோலுரிக்கிறார்கள். அதனால் அம்மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், அதை வெற்றி கொண்டது எப்படி என்பதுதான் நாளைய தீர்ப்பு. மாணவர்களே நடத்திய தாகம் இதழின் இன்ஸ்பிரேஷனில்தான் இந்தப் படத்தை எடுத்தார் எஸ்.ஏ.சி.
விஜய்யை அதிரடியாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியாயிற்று. முதல் படம் பெரிய வெற்றி அடையவில்லை என்பது எஸ்.ஏ.சி-க்கு வருத்தத்தைத் தரவில்லை. ஏனெனில் ஒரு டிரங்கு பெட்டியோடு சென்னை வந்தவருக்கு, இந்த இறக்கமெல்லாம் ஒரு பொருட்டே அல்லவே.
விஜய்யைத் திரையுலகில் முத்திரை பதிக்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். 90கள் வரையிலும் தன் படம், தன் இயக்கம் என்றே வாழ்ந்துவிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் தலையெடுத்ததும் தனது சிந்தனை, செயல், பொறுப்புகளில் பெரும்பான்மையை விஜய்யின் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார்.
நாளைய தீர்ப்பு எஸ்.ஏ.சந்திரசேகரின் கையிருப்பை வெகுவாக கரைத்தது. விஜய் சினிமாவில் ஆளாக வேண்டும். தானும் பொருளாதாரச் சரிவிலிருந்து வெளியேற வேண்டும்.
விஜயகாந்துக்கு தான் எல்லாவிதத்திலும் நெருக்கமானவர் என்றாலும், இதுபற்றி முதலில் விஜயகாந்தின் நிழலான இப்ராஹிம் ராவுத்தரிடம் பகிர்ந்துகொண்டார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அப்போது விஜயகாந்த் எந்த அளவுக்கு பிஸி என்றால், திரைப்படப் பயிற்சி மாணவர்கள் எடுக்கும் படங்களுக்கு இரவிலும், மற்றவர்களுக்கு பகலிலும் கால்ஷீட் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க கூட நேரம் இல்லாமல் சுற்றிச் சுழன்றுக்கொண்டிருக்கும் அளவுக்கு பிஸி.
இந்த நேரத்தில்தான், “எனக்கு சில கிரவுண்டு இடம் இருக்கு. அதை வித்துட்டு ஒரு படம் பண்றேன். என் மகன் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன். அதுல விஜி கெஸ்ட் ரோல் பண்ணணும்” என்று ராவுத்தரிடம் சொன்னபோது எஸ்.ஏ.சிக்கு ராவுத்தர் சொன்ன பதில்,
“நீங்க முதல்ல உங்க பொருளாதாரத்துல முன்னுக்கு வாங்க, அதுக்குப் பிறகு உடனே விஜய்யை வெச்சு படம் பண்ணலாம். சொத்தெல்லாம் அப்படியே இருக்கட்டும். இப்ப நானே தயாரிக்கிறேன். விஜியை வெச்சு எடுங்க” என்று ராவுத்தர் சொல்ல, அந்த அடிப்படையில் உருவானதுதான் ராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ராஜதுரை. 15 நாட்களில் படத்தை முடித்தார் எஸ்.ஏ.சி. இதன் மூலம் பொருளாதாரத்தில் நிமிர்ந்தார்.
அடுத்து விஜய்யை விஜயகாந்தோடு நடிக்க வைக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்றார். அது சாதாரண வெற்றியல்ல, காலம் விஜய்யின் முகவரியை மாற்றி எழுதியது அப்போதுதான். அப்பாவின் வீட்டிலிருந்து வெளியேறி தானே பங்களா கட்டி தனக்கென தனி முகவரி அமைக்கும் அளவுக்கு…
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]