தாகம் இதழும் நாளைய தீர்ப்பு படமும்!
வேந்தன்
சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்து அப்போது பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். அப்போது மாணவர்கள் மத்தியில் எஸ்.ஏ.சிக்கு ஒரு கிரேஸ் இருந்தது. சமூகத்தில் எழுச்சி ஏற்படுத்தும் அவரது படங்கள் எல்லாம், மாணவர்களை இளைஞர்களைக் கட்டிப் போட்டிருந்தன.
குறிப்பாக எஸ்.ஏ.சந்திரசேகரும் கலைஞரும் இணைந்து படைத்த படங்கள் எல்லாம் குருதியை சூடாக்கும் உறுதியான வெப்பப் படைப்புகளாக இருந்தன. எஸ்.ஏ.சந்திரசேகர் மத்தியில் இளைஞர்களுக்கு ஒரு மாஸ் உருவாகியிருந்த காலம் அது.
பத்திரிகையாளர்களுடன் பழகுவதில் எஸ்.ஏ.சிக்கு அலாதி ஆர்வம் உண்டு. வெளிவந்த செய்திகள் மட்டுமல்ல வெளிவராத, வெளியிடப்படாத செய்திகளைப் பற்றியெல்லாம் அவர் பத்திரிகையாளர்களுடன் மனம்விட்டு விவாதிப்பார். மேலும் சமூக ஊடகங்கள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே சென்னையில், தமிழகத்தில் குறிப்பிடத்தக்க புதிய சம்பவங்கள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து அவர்களை ஊக்குவிப்பார் எஸ்.ஏ.சி.
சினிமா இயக்குநர்களில் அப்போது மணிவண்ணன் குறிப்பிடத் தகுந்த ஆளுமை. தமிழர் எழுச்சிக்காக மாணவர்கள் எல்லாம் சேர்ந்து, மாணவர் தாகம் என்ற பத்திரிகையை அப்போது தொடங்கியிருந்தனர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து இந்தப் பத்திரிகையை தொடங்கியிருந்தார்கள். அதாவது கல்லூரி அளவில் கையெழுத்துப் பத்திரிகை நடத்துவது அப்போது நிறைய இருந்தது. நிலவே மலரே மாணவனே என்றெல்லாம் கவிதை எழுதி அதை கல்லூரிக்குள்ளேயே ரசித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் மாணவர் தாகம் இதழ் வித்தியாசமானது. சமூக அவலங்கள் மீது சாட்டையடியான எழுத்துகள், எந்த அதிகாரத்துக்கும் வளையாத நெருப்பும் பொறுப்பும் கொண்ட மாணவர்களால் தொடங்கப்பட்டதுதான் மாணவர் தாகம். தனக்கு எத்தனையோ நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் இன்றளவும் அந்த இதழை முப்பதாவது ஆண்டை நோக்கி முன்னேற்றத்தின் திசையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார் மாணவர் தாகம் இதழின் ஆசிரியர் தாகம் செங்குட்டுவன்.
பள்ளிப் படிக்கும்போதும் சட்டம் ஒரு இருட்டறை படத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் செங்குட்டுவன். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது சமூக உந்துதல் காரணமாக பல கல்லூரி மாணவர்களை இணைத்து, ‘மாணவர் தாகம்’ என்ற இதழை உருவாக்கினார். இதை மணிவண்ணன், எஸ்.ஏ.சி போன்ற திரை ஆளுமைகள் அப்போது அறிந்துகொண்டனர்.
தாகம் பத்திரிகையைப் பார்த்துவிட்டு, ‘அட… சினிமாவுக்கு கட் அடிக்கிறதுதான் காலேஜுனு பல சினிமாக்கள்ல சொல்லிக்கிட்டு இருக்கிற நேரத்துல இப்படி ஒரு பசங்களா?’ என்று வியந்த எஸ்.ஏ.சந்திரசேகர் தாகம் பத்திரிகை நடத்தும் மாணவர்களைச் சந்திக்க ஆசைப்படுகிறார்.
இதுபற்றி தற்போது தாகம் ஆசிரியர் தாகம் செங்குட்டுவன் எழுதிய சில பகுதிகள் இங்கே பொருத்தமாக இருக்கும்.
“அது 1992ஆம் ஆண்டு. அனைத்துக் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணைந்து ‘தாகம்’ இதழை வெளியிடுகிறோம். இதை அறிந்த இரண்டுத் திரைப்பட ஆளுமைகள் ‘தாகம்’ இதழின் ஆசிரியர் குழுவை சந்திக்க விரும்புகின்றனர். ஒருவர் அண்ணன் மணிவண்ணன். இன்னொருவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
1992ஆம் ஆண்டு சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ‘தாகம்’ ஆசிரியர் குழுவை அவர் சந்திக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் எங்களுடன் மனம் விட்டுப் பேசுகிறார். “எங்களில் பெரும்பாலானோர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள்.
‘சமூகத்தின் அத்தனை அநீதிகளையும் எழுதுங்கள். உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் என்னை உடனே அழையுங்கள். நான் வந்து உங்களுக்காக களத்தில் நிற்பேன்’ என்று எஸ்.ஏ.சி சார் எங்களுக்கு உற்சாகம் ஊட்டியதை மறக்கவே முடியாது.
அனைவரும் விடை பெறும்போது, ‘ஜோசப்’ என்று அழைத்தார் எஸ்.ஏ.சி. எங்கள் முன் தயங்கியபடி நின்றார் விஜய்.
“விஜி… இவங்க எல்லோரும் காலேஜ் ஸ்டூடன்ஸ். படிக்கும்போதே அவங்களுக்காக பத்திரிகை நடத்தறாங்க” என்று எங்களை அறிமுகம் செய்தார்.
“விஜி இப்ப லயோலால விஸ்காம் படிக்கிறான். சினிமால நடிக்கணும்னு ஆசை. ரெண்டு படம்தான் அவனை வெச்சி எடுப்பேன். அதுக்கப்புறம் அவன் வளர்ச்சியை பாருங்க” என்று எஸ்.ஏ.சி சொன்னபோது நாங்களும் ஆச்சரியப்பட்டோம். விஜய்யும் வெட்கப்பட்டார்.
மீண்டும் ஒரு நாள் எஸ்.ஏ.சியிடம் இருந்து அழைப்பு.
‘ஸ்டூடன்ஸ் எல்லாம் சேர்த்து பத்திரிகை ஆரம்பித்து நடத்துவதுபோல் ஒரு கதை ரெடி பண்ணி இருக்கேன் தம்பி. உங்க டீம்தான் இன்ஸ்பிரேஷன். விஜய்தான் ஹீரோ. படத்தோட போரு நாளையத் தீர்ப்பு” என்றார்.
சொன்னபடியே படம் வெளியானது. படத்தின் கல்லூரி மாணவர்களுக்கான காட்சியை என்னிடம் தந்தார் எஸ்.ஏ.சி. சுப்ரகீத் ப்ரீவியூ திரையரங்கில் அனைத்துக்கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்தேன்” என்று நெகிழ்கிறார் தாகம் செங்குட்டுவன்.
லயோலாவில் விஸ்காம் படித்துக் கொண்டு தானுண்டு தன் வீடுண்டு என்று இருந்த விஜய்… பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டே தானுண்டு தன் வீடுண்டு என்று இருக்காமல் சமூகம் என்றும் ஒன்று உண்டு என்று அக்கறையால் துடித்த மாணவர்கள்!
இந்த இரண்டையும் கலந்துதான் நாளையத் தீர்ப்பு என்ற படத்தை உருவாக்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அதன் பிறகு விஜய்யின் வளர்ச்சி எப்படி இருந்தது?
(நாளை தொடரும்)
முந்தைய பகுதிகள்
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]