எஸ்.ஏ.சி – விஜய்: இன்றைய வழக்கு – நாளைய தீர்ப்பு! மினி தொடர்-3

அரசியல் சிறப்புக் கட்டுரை

செய்தித்தாள்களும் எஸ்.ஏ.சியும்!

வேந்தன்

எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்கள் எல்லாமே சமூகம் மீதான கோபம், குற்றம், நீதிமன்றம், சட்டம் என்று ஆக்‌ஷனாகவே தொடர்ந்துகொண்டிருந்தன.

இந்த நிலையில்தான் தன் மகன் விஜய்யை தயாரிப்பாளர் என்று அறிமுகப்படுத்தி 1991ஆம் ஆண்டு நண்பர்கள் என்ற படத்தை உருவாக்கினார். இப்படத்தை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கினார். ஆயினும் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் டச் இல்லாமல் இல்லை.

ஆக்‌ஷன் படங்களையே எடுத்துக்கொண்டிருந்த எஸ்.ஏ.சி. முகாமில் இருந்து ஒரு காதல் படமாக வந்தது நண்பர்கள். தான் டிரங்கு பெட்டியோடு சென்னைக்கு வந்த நிலையில், அந்த வயதுக்கு முன்னரே விஜய்யை சினிமாவில் தயாரிப்பாளர் ஆக்கியவர் எஸ்.ஏ.சி.

அதன்பின் 1992இல் மீண்டும் ஷோபா சந்திரசேகரின் இயக்கத்தில் இன்னிசை மழை என்ற படத்தைத் தயாரித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். இந்தப் படத்தின் பெயருக்கு ஏற்ற வகையில் இசைக்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படத்தின் இசை தொடர்பான உரையாடல்களின்போது, இந்தப் படத்தை தானே வாங்கிக் கொள்வதாகக் கூறியிருக்கிறார் இளையராஜா. அதனால், தன் படத்தை ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்த விநியோகஸ்தர்களுக்குப் படத்தைத் தர முடியாது என்று சொல்லிவிட்டார். 92இல் இளையராஜா இசை என்பதே படத்தின் முக்கியமான வியாபார அம்சம். அதனால் இன்னிசை மழையை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் காத்திருக்க, எஸ்.ஏ.சியோ அவர்களுக்குத் தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்த இளையராஜா என்ன நினைத்தாரோ, படத்தை வாங்கிக்கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார். அதனால் மீண்டும் தனது வழக்கமான விநியோகஸ்தர்களிடமும் போய் எஸ்.ஏ.சியால் கேட்க முடியவில்லை. தனது சுய மரியாதை போய்விடக் கூடாது என்பதால் பல்லைக் கடித்துக்கொண்டு தானே படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்தார். இன்னிசை மழை எதிர்பார்த்த அளவுக்கு அவரது வர்த்தகத் தோட்டத்தில் பெய்யவில்லை. இதனால் பெரும் நட்டத்தை சந்தித்தார் எஸ்.ஏ.சி.

இந்த காலகட்டத்தில்தான் எஸ்.ஏ.சி. தனக்குள்ளேயே ஒரு விவாதத்தை நடத்திக் கொண்டார். “நாம் புகுந்து விளையாடும் ஏரியாக்களான சட்டம், நீதி, சமூகம், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான கொந்தளிப்பு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு… காதல், முத்தம், கல்லூரி என்று வேறு பாதையில் பயணப்பட்டதால்தான் இவ்வளவு சறுக்கல்களை சந்திக்கிறோமோ? மீண்டும் நமது ஏரியாவிலேயே இறங்கியடிப்போமா?” என்று சிந்தனையில் இருந்தார் எஸ்.ஏ.சி.

இதுபற்றி தனது நண்பர்களிடம், சில உதவி இயக்குநர்களிடமும் கூட விவாதித்தார் எஸ்.ஏ.சி. கோபக்கார எஸ்.ஏ.சியைதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ரொமான்ஸ் எஸ்.ஏ.சியை அல்ல என்று புரிந்துகொண்டார்.

அப்போதே தினமும் நான்கைந்து செய்தித் தாள்களைக் காலையில் படிக்கும் பழக்கம் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி. தன் உதவி இயக்குநர்களிடமும் தினமும் செய்தித்தாள்களைப் படிக்கச் சொல்லுவார்.

அரசியல்வாதிகளின் அனல் பறக்கும் பேட்டி, உட்கட்சி மோதல்கள், மக்கள் படும் அல்லல்கள், அவலங்கள், தேர்தல் கூத்துகள், முக்கிய வழக்குகளின் விசாரணை பற்றிய செய்திகள் இவையெல்லாம் விரும்பிப் படிப்பார் எஸ்.ஏ.சி. உதவி இயக்குநர்களையும் படிக்கச் சொல்லுவார்.

செய்தித் தாள்கள்தான் ஒவ்வொரு நாளிலும் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நமக்குச் சொல்லுகின்றன. கற்பனையை விட உண்மையே சுவாரஸ்யமானது. எனவே செய்தித் தாள்கள் வாசித்தல் என்பது திரைக்கதைக்கு முக்கியமானது என்று நம்பினார் எஸ்.ஏ.சி. அவரிடம் உதவி இயக்குநராக இருந்து பின் பிரமாண்ட இயக்குநராக மாறிய ஷங்கரும் கிட்டத்தட்ட இதே வழியைதான் பின்பற்றி வருகிறார். ஷங்கர் படத்தின் காட்சி அமைப்புகளில் பிரமாண்ட கற்பனை இருந்தாலும் அந்த சம்பவங்களின் சாரம் சமூகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டிருக்கும்.

இப்படியாக மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் எஸ்.ஏ.சியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தனர் சில மாணவர்கள்.

மாணவர்கள் என்றால் சாதாரண, ‘மாணவர்கள்’ அல்லர். பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள். அவர்கள் எஸ்.ஏ.சியைச் சந்தித்த அந்த காலகட்டமும், விஜய்யை அவர் திரையுலகத்துக்கு நடிகராக, நாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிந்தித்த காலகட்டமும் ஒன்று.

காலம் எங்கிருந்தோ சில புள்ளிகளை அள்ளிக்கொண்டு வந்து சேர்த்து ஒரு கோலத்தை தீட்ட ஆரம்பிக்கும். அப்படித்தான் அந்த துடிப்பான பத்திரிகையாளர்கள் எஸ்.ஏ.சியின் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

(நாளை தொடரும்)actor vijay sa chandrasekar party clash 3

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *