எஸ்.ஏ.சி. விஜய்- இன்றைய வழக்கு-நாளைய தீர்ப்பு! மினி தொடர்-2

Published On:

| By Balaji

அந்த டிரங்க் பெட்டி

வேந்தன்

தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டம் பற்றி பல திரைப்படங்கள் தமிழில் வந்துள்ளன. விஜய்யின் லேட்டஸ்ட் படமான பிகில் படத்தில் கூட, தந்தைக்கும் மகனுக்குமான உறவும், நட்பும், புரிந்துணர்வும் இழையோடும்.

பிகிலு….இங்க வா…என்று அப்பா விஜய் மகன் விஜய்யை அழைத்து இறுகக் கட்டிக் கொள்ளும் காட்சியில் நடிக்கும்போதெல்லாம் பார்த்த அனைவருக்கும் தங்களது தந்தை பற்றிய நினைவு வந்திருக்கும். ஆனால், விஜய்க்கு தன் தந்தை நினைவு வந்திருக்குமா என்று தெரியவில்லை. .

ஏனெனில் விஜய்யும், அவரது தந்தையும் சில வருடங்களாகவே, சற்று விலகியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே தற்போது பேச்சுவார்த்தையே இல்லை என்று விஜய்யின் தந்தை ஷோபா வெளிப்படையாக பேட்டியே கொடுத்திருக்கிறார்.

என்னையும் அரசியலையும் சேர்த்து மையப்படுத்தி மீடியாக்களில் பேசாதீங்க” என்று பலமுறை விஜய் கூறியும் அவர் கேட்கவில்லை. அதனால் விஜய் நீலாங்கரையிலும், எஸ்.ஏ.சி. அடையாறிலும் இருக்கிறார்கள். இருவரும் பேசிக்கொண்டு ஆண்டுக் கணக்கில் ஆகிறது என்கிறார்கள்.

சிறுபிள்ளை விஜய்யை பொத்திப் பொத்தி வளர்த்திருக்கிறார் எஸ்.ஏ.சி. எப்போதும் தன் கண் எல்லைக்குள்ளேயே விஜய் சுற்றி வரவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். விஜய் தன் பார்வையிலிருந்தோ, தன் அறிதலில் இருந்தோ நழுவினால் பதற்றமாகிவிடுவார் எஸ்.ஏ.சி. அந்த அளவுக்கு விஜய் மீது பொசசிவ் ஆனவர்.

சாலிகிராமத்தில் இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரின் வீடு வித்தியாசமானது. ஒருபக்கம் வீட்டில் எஸ்.ஏ.சி. குடும்பத்தினர் இருக்கும்போதே இன்னொரு பக்கம் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும். விஜய் அப்போது சின்ன பையன்.

சந்திரசேகரது அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் ஒரு வேளாங்கண்ணி மாதா சிலை இருக்கும். அந்த சிலை முன் இரும்பு டிரங்க் பெட்டி இருக்கும்.

பிளாட்பார்ம்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் ஒட்டுமொத்த குடும்பத்துக்கான பொருட்களையும் போட்டு மூடி வைத்திருப்பார்கள். விடிந்ததும் அதில் எல்லாவற்றையும் போட்டு மூடிவிட்டு வெளியே கிளம்பிவிடுவார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரி டிரங்கு பெட்டி ஒன்றை, அங்கேயே வைத்திருந்தார் சந்திரசேகர். சாலிகிராமம் வீட்டில் அவர் குடியிருந்தவரை அது அங்கேயேதான் இருந்தது.

இது என்ன சார் டிரங்க் பெட்டி என்று அவரிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது….

“இதான் சார் நான் ஊர்லேந்து சென்னை வரும்போது என்கிட்ட இருந்த சொத்து. இப்ப இந்த வீடு உட்பட எனக்கு இருக்குற எல்லாமே நான் உழைச்சு வாங்கினது. உழைச்சுதான் சம்பாரிச்சேன், இருந்தாலும் எனக்கு கர்வம் வந்துடக் கூடாதுனுதான் வீட்டு வாசல்லயே இந்த பெட்டிய வச்சிருக்கேன். வீட்டை விட்டு போகும்போதும், வீட்டுக்குள்ள வரும்போதும் மாதாவை பார்ப்பேன். அப்ப எல்லாம் இந்த பெட்டியும் என் கண்ணில் படும். நம்ம எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம்னு ஒரு கணம் தினமும் நினைச்சுப் பார்ப்பேன். இந்த டிரங்கு பெட்டிய பத்தி விஜய் சின்னப் பிள்ளையா இருந்தபோதே அவன்கிட்ட சொல்லியிருக்கேன். அவன் ஒரு தயாரிப்பாளரோட, இயக்குனரோட பையனா வளர்ந்திருந்தாலும், அவங்க அப்பா எப்படி வளர்ந்தார்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என்று அந்தப் பத்திரிகையாளரிடம் விளக்கியிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

பழையதை மறக்கக் கூடாது, எதுவும் நமக்கு சும்மா கிடைக்காது என்பதை விஜய்க்கு சிறு வயதிலிருந்தே உணர்த்திய எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு கட்டத்தில் விஜய்யை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார்.

எஸ்.ஏ.சியின் படங்கள் கற்பனை நயம் கலந்த அழகியல் என்ற பட்டியலில் இருக்காது. உண்மையும், எதார்த்தமும் நிறைந்த நம்மைச் சுற்றி நடக்கிற கண்ணுக்கு நேரான சம்பவங்களே எஸ்.ஏ.சி.சினிமாவில் எதிரொலிக்கும்.

அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் விஜய்யின் அரங்கேற்றம் அமைந்தது. உண்மையை சொல்லப் போனால்… ஹீரோ என்பதற்கான வரையறைகளாக சினிமாவுக்குள்ளேயே பலர் அப்லோடு செய்து வைத்திருந்த எந்த சினிமாட்டிக் கூறுகளும் விஜய்யின் தோற்றத்தில் அப்போது இல்லை என்ற விமர்சனங்கள் தந்தையின் காதுபடவே விழுந்தன.

ஆனால் எஸ்.ஏ.சி.யின் தைரியமும், விஜயகாந்த், ரஜினிகாந்த் என்று அப்போது கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த கருப்பர் கூட்டமும் விஜய்யை சினிமாவுக்குள் கொண்டு வருவதற்கு எஸ்.ஏ.சி.யை தயார் படுத்தின.

அப்போது விஜய்யின் நாட்களுடைய ஒவ்வொரு நொடியையும் செதுக்கிக் கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி.

(நாளை தொடரும்)actor vijay sa chandrasekar party clash 2

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel