எஸ்.ஏ.சி. -விஜய்: இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு
வேந்தன்
எஸ்.ஏ.சந்திரசேகரின் பிள்ளை என்பதுதான் விஜய்க்கு சினிமா உலகின் ஆரம்ப கால அடையாளம். ஒவ்வொரு பிள்ளைக்கும் அவரது அப்பாதான் அடையாளம். ஆனால் அப்பிள்ளை தன் காலால் ஒரு வரலாற்றுப் பாதையில் நடக்க ஆரம்பித்துவிடும்போது ஆரம்பத்தில், கைப்பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய தந்தை ஒரு கட்டத்தில் தானாகவே ஒரு அழகான இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தன் மகன் தனித்து நின்றுக் களமாடுவதை ஒரு தந்தை கண்டு களிக்க வேண்டும். ஆனால் எஸ்.ஏ. சந்திரசேகர் அப்படிப்பட்ட தந்தையாக இல்லை என்பதுதான் விஜய்யையும், எஸ்.ஏ.சியையும் நெருங்கிப் பார்த்தவர்களின் அவதானம்!
விஜய் தன் சிறுவயதில் மிக உற்சாகமான, தான் இருக்கும் இடத்தை கலகலவென வெண்கலக் கடை போல வைத்திருக்கும் கேரக்டர். ஆனால், தன் பத்தாவது வயதில் தன் தஙகையை இழந்துவிட்டதில் இருந்து எங்கிருந்தோ வந்த அமைதி அவருக்குள் குடிகொண்டுவிட்டது. அதற்கு முன் அப்பா, அம்மாவையெல்லாம் அவர் கலாய்ப்பது குடும்ப அளவில் வெகு பிரசித்தம். தங்கையின் இழப்பு விஜய்யின் சுபாவத்தையே முழுதாக புரட்டிப் போட்டுவிட்டது. அமைதியான அடக்கமான ஒரு ரிசர்வ் டைப் ஆளுமையாக தன்னை வளர்த்துக்கொண்டார். அந்த பண்புதான் அப்பா, அம்மாவை கூடுதலாக மதிக்க வேண்டுமென்ற பண்பையும் அவருக்குக் கொடுத்தது.
ஆனால் அந்தப் பண்பை அவரது அப்பா ச்ற்று அதிகப்படியாகவே பயன்படுத்திக் கொண்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என்கிறார்கள் விஜய் மக்கள் மன்றத்தின் ஆரம்ப கால நிர்வாகிகள்.
“விஜய்யை பார்த்துப் பார்த்து வார்த்தெடுத்தது எஸ்.ஏ. சந்திரசேகர்தான். அண்ணாமலை படம் வந்த புதிதில்…விஜய் அதைப் பார்த்துவிட்டு அரசியல்வாதியை எதிர்த்து ரஜினி பேசும் வசனம், சரத்பாபுவிடம் சவால் விடும் வசனம் ஆகியவற்றையெல்லாம் சாலிகிராமம் வீட்டில் தன் அப்பா, அம்மாவிடம் சரமாரியாக நடித்துக் காட்டுவார் விஜய். நீண்ட வசனமாக இருந்தபோதும் ஒரு அட்சரம் கூட பிசகாமல் ரஜினியின் மாடுலேஷனிலேயே பேசி அசத்துவார் விஜய். அதைப் பார்த்துதான் விஜய்யின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ‘நாம் இருவருமே சினிமா ரத்தம்தான். நம் பையனும் நிச்சயம் சினிமாவில் சாதிப்பான்’ என்ற நம்பிக்கை அதிகமானது. அதன் அடிப்படையில்தான் விஜய்யை செதுக்க ஆரம்பித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
விஜய்க்கு சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருந்திருந்தால் என்னதான் முயன்றாலும் எஸ்.ஏ.சி.யால் விஜய்யை ஹீரோவாக்கியிருக்க முடியாது. எனவே விஜய்க்குள் இருக்கும் கலை தாகம் அவரை ஹீரோவாக்கியிருக்கிறது. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. விஜய்யின் அனைத்து அசைவுகளுக்கும் தானே காரணம் என்ற ஒரு உலகத்தில்தான் இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
விஜய் ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி தமிழகம் முழுவதிலும் அதை வேர்விடச் செய்தவர் எஸ்.ஏ.சி.தான். இல்லையென்றே சொலல்வில்லை. அதற்கான மரியாதையை விஜய் இன்று வரை கொடுத்து வருகிறார்.
ஆரம்ப காலங்களில் ரசிகர் மன்றங்களைப் பொறுத்தவரை விஜய்யின் வேலை, வந்து நின்று ஒவ்வொரு ரசிகருக்கும் சில நொடிகள் ஒதுக்கி போட்டோ எடுத்துக் கொண்டு மில்லி மீட்டர் புன்னகைத்துவிட்டுச் சென்றுவிடுவதுதான். மற்ற அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்தவர் எஸ்.ஏ.சி.தான்.
மன்றம் என்றாலே விஜய்யின் முதல் ரியாக்ஷன், ‘அப்பாகிட்ட கேட்டுக்கங்க’என்பதுதான். யார் மாவட்டத் தலைவர், யார் மாநிலத் தலைவர், யார் எந்த மாவட்டத் தலைவர் என்பதெல்லாம் கூட விஜய்க்கு தெரியாத காலம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க தன் மன்றங்களை அப்பாவிடமே ஒப்படைத்த விஜய், ஒரு கட்டத்தில் அப்பாவைத் தாண்டி ஓர் அடி எடுத்து வைத்தார். ஏன்?
ஒரு பேட்டியில் விஜய்யின் அம்மா ஷோபா சொல்லியிருக்கிறார். “விஜய் அவ்வளவு சாதாரணமாக ஒரு முடிவெடுத்துவிடமாட்டார். அப்படி முடிவெடுத்தால் அது எளிதில் அசைக்க முடியாத ஆழமான முடிவாக deep decision ஆக இருக்கும்” என்று.
அப்படிப்பட்ட ஆழமான ஒரு முடிவை விஜய் எடுத்தார்.
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 8]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 9]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 10]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 11]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 12]