பொஸசிவ் பூக்கள்!
வேந்தன்
எந்த ராவுத்தர் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்தாரோ, அந்த ராவுத்தருக்கே விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. அது ஏன் என்பது விஜய்க்கே வெளிச்சம். ஒருவேளை தந்தை சிபாரிசு செய்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக விஜய் அவர்களை நிராகரித்தாரா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம்.
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது இத்தனை படங்களை இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகருக்குத் தெரியும். அதேநேரம் தோளுக்கு மேல் வளர்ந்தாலும் நான் தூக்கி வளர்த்த குழந்தையல்லவா என்பதும், இன்னும் விஜய்யை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும்தான் அப்பாவாக அவரது ஆசை.
கண்கள் தாண்டிப் போகாதே என்னுயிரே… என்ற திரைப்படப் பாடலைப் போல விஜய்யை தன் கண்ணுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற பொசசிவ் பூக்கள் எஸ்.ஏ.சி.யின் இதயத்துக்குள் இன்னமும் பூத்துக் கொண்டே இருக்கின்றன.
ஒரு சிறு ஃப்ளாஷ்பேக்…
விஜய் நாளைய தீர்ப்பில் நாயகனாக அறிமுகமாகி, செந்தூரபாண்டியிலும் நடித்து ரீச் ஆகிவிட்ட தருணம். விஜய்,எஸ்.ஏ.சி, ஷோபா மூவரும் ஒரு விழாவுக்கு சென்றிருக்கிறார்கள். அந்த விழாவில் முன் வரிசையில் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். மேடைக்கு செல்ல வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை. மைக்கில் இன்னும் அழைக்கவில்லை. எஸ்.ஏ.சி.யின் பண்பு என்னவென்றால் விழா அழைப்பிதழில் என்ன நேரம் போட்டிருக்கிறதோ அதற்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் முன்பே அங்கே ஆஜராகியிருப்பார். அதுதான் விஜய்க்கு இன்றும் நற்பண்பாக நீட்சி அடைந்திருக்கிறது.
அந்த விழாவில் முன் வரிசையில் மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள் விஜய்யைக் காணோம். விழா ஏற்பாட்டாளர்களிடம் எஸ்.ஏ.சி. பேசிக் கொண்டிருக்கும்போது விஜய் எழுந்து பக்கத்தில் சென்றிருக்கிறார். பேசிவிட்டுத் திரும்பிப் பார்த்த எஸ்.ஏ.சி.க்க்கு அதிர்ச்சி.
“எங்கே அவன்?” என்று ஷோபாவிடம் கேட்கிறார். ‘தெரியலைங்க’ என்கிறார் அவர். அதற்குள் எஸ்.ஏ.சி. எமோஷனலாகிவிட்டார். விழா ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டு, ‘தம்பி…விஜி இங்க இருந்தானே எங்க? பாத்தீங்களா?’ என்று தேட ஆரம்பித்துவிட்டார். இரண்டு நிமிடங்கள் முடிந்து மூன்றாம் நிமிடம் முளைப்பதற்குள் அந்த விழா ஏற்பாட்டாளர் விஜய்யை அரங்கத்தில் இருந்த ரெஸ்ட் ரூமில் தேடிப் பிடித்து அழைத்து வந்துவிட்டார்.
‘உங்க அப்பா உங்களை தேடுறாரு’ என்று அவர் சொன்னதும் விஜய் பதற்றமாகிறார். ‘அப்பா தேடுனாரா… அப்பா தேடுனாரா?” என்று அந்த மீச்சிறு நேரத்துக்குள் மீண்டும் மீண்டும் கேட்கிறார் விஜய்.
சரியாக நான்காம் நிமிடத்தில் அங்கே விஜய் வந்துவிட்டார். அதற்குள் அந்த இடத்தை அமர்க்களம் பண்ணிவிட்டார் எஸ்.ஏ.சி.
விஜய் வந்ததும், ‘எங்கடா போனே?’ என்று அத்தனை பேர் முன்பும் கேட்கிறார்.
ஒரு தந்தை மகனைக் கேட்கலாம்தான்.
ஆனாலும்… இருபதுகளில் அப்போதுதான் இடம் பிடித்திருக்கும் ஒரு மகன், அதுவும் இரு சினிமாக்களில் நடித்து நான்கு பேருக்கு முகம் அறிமுகமாகியிருக்கும் ஒரு மகனை ஒரு விழாவில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்பது எந்த மகனுக்கும் எரிச்சலைத்தான் தரும்.
ஆனால் விஜய்க்கு எரிச்சல் வரவில்லை. அப்பாவின் அருகே வந்து, ‘அப்பா ரெஸ்ட் ரூம் போனேம்ப்பா’என்று மெதுவாக கிசுகிசுத்தார்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது.
இது ஒரு சாம்பிள்தான். கிட்டத்தட்ட விஜய்யின் சினிமா உலக ஆரம்ப கால வாழ்க்கை இப்படி ஒரு ‘அப்பா பதற்றம்’ நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. கதை கேட்பதில் இருந்து கால்ஷீட் கொடுப்பதில் இருந்து ஷூட்டிங் நேரத்தை நிர்ணயிப்பதில் இருந்து சில நேரம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை முடிவு செய்வதில் இருந்து எல்லாமே எஸ்.ஏ.சி.என்ற நிலையில்தான் இருந்திருக்கிறார் விஜய்.
இந்த மினி தொடரில் இத்தனை நாள் எஸ்.ஏ.சி.யின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தோம். இனி விஜய் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப் போகிறோம்.
பாச வலையில் சிக்கலாம்.. பாசம் என்ற பெயரில் கண்காணிப்பு வலையில் சிக்கலாமா?
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 8]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 9]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 10]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 11]