அப்பா எனும் ஆரம் இல்லாமல் விஜய்யின் வட்டம்!
வேந்தன்
தன் மகனை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மிகவும் ஆசை. அறிமுக ஆரம்பத்தில் இருந்த சின்னப் பையன் விஜய்யை வைத்து படங்களை இயக்கி விஜய்யை கரை சேர்த்த எஸ்.ஏ. சந்திரசேகர், கால ஓட்டத்தில் தன்னை இயக்குனராக மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள தன் பையனையே வைத்து ஒரு படம் இயக்கித் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டார்.
விஜய்யின் கால்ஷீட் கேட்டு எத்தனை எத்தனையோ தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சி.யிடம் அணுகியிருக்கிறார்கள், அலைந்திருக்கிறார்கள். அனுகூலம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் வீட்டுக்குள்ளேயே நாயகனை வைத்துக் கொண்டு எஸ்.ஏ.சி.யோ பல புதுமுகங்களையும், சற்றே வர்த்தக அந்தஸ்து குறைந்த நட்சத்திரங்களையும் வைத்து இயக்கிக் கொண்டிருந்தார்.
எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு விஜய்யின் கால்ஷீட் வாங்கிக் கொடுத்த எஸ்.ஏ.சி., தானே ஒரு தகப்பனாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் விஜய்யிடம் கதை சொல்லி கால்ஷீட் கேட்டார். ஆனால் அதெல்லாம் கிடையாது என்று மறுத்துவிட்டார் விஜய்.
இது ஒருபக்கம் என்றால்…இன்னொரு பக்கம் இப்ராஹிம் ராவுத்தர் எஸ்.ஏ.சி.யை அணுகினார். ஈருடல் ஓருயிராக மிகச் சிறந்த நண்பர்களாக அறியப்பட்டவர்கள் விஜயகாந்தும் இப்ராஹிம் ராவுத்தரும்.
திமு, திபி (திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின்) என்பது விஜய்க்கு மட்டும்தானா…விஜயகாந்துக்கு இல்லையா? அவருக்கும் திருமணமான பிறகு ராவுத்தருடன் இருந்த நிபந்தனையற்ற நட்பு கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகத் தொடங்கியது. இன்னும் சொல்லப் போனால் ராவுத்தருடன் கொஞ்சம் கொஞ்சமாக தனது திரைத் தொடர்புகளையும் தனிப்பட்ட தொடர்புகளையும் கூட குறைத்துக் கொண்டார் விஜயகாந்த். இதற்குக் காரணம் குடும்ப வலைப்பின்னல்தான்.
ராவுத்தருக்கு கடுமையான பொருளாதாரச் சுமை. திருமணம் ஆகாமலேயே இருந்துவிட்ட இப்ராஹிம் ராவுத்தர் தன்னை நம்பிய பலருக்கும் உதவி செய்ததால், பொருளாதாரப் பள்ளத்தில் விழுந்துவிட்டார், எழுந்திருக்க முயற்சித்தபோதுதான் அவருக்கு விஜய், எஸ்.ஏ.சி. ஞாபகம் வந்தது.
ஒரு காலத்தில் விஜய்யும் விஜயகாந்தும் இணைவதற்காக உதவி செய்தவர் மட்டுமல்ல…எஸ்.ஏ.சிக்கும் பற்பல உதவிகளைச் செய்தவர் ராவுத்தர். காலத்தின் சக்கரம் சில நேரம் உதவி செய்பவர்களை உதவி கேட்பவர்களாக மாற்றும். அதைவிட, தான் உதவி செய்தவர்களிடமே உதவி கேட்க வைக்கும் ஒரு சங்கடமான சுழற்சியையும் காலச் சக்கரம் சந்திக்கும். அப்படித்தான் ராவுத்தர் எஸ்.ஏ.சி.யிடம் உதவி கேட்கும் நேரம் நேர்ந்தது.
வர்த்தக சக்கவர்த்தியான விஜய்… ராவுத்தருக்கு ஒரு படம் கொடுத்தால் போதும். அந்த பிசினஸே ராவுத்தரை எழுந்து நிமிர வைக்கும். விழுந்த வலியையும் மறக்க வைக்கும். அந்த அடிப்படையில் எஸ்.ஏ.சி.யிடம் உதவி கேட்கிறார் ராவுத்தர்.
”கண்டிப்பாக நான் விஜய்யிடம் பேசுறேன். நான் கால்ஷீட் வாங்கித் தர்றேன்” என்று உத்தரவாதம் கொடுத்தார் எஸ்.ஏ.சி. ராவுத்தரும் எஸ்.ஏ.சியிடம் அடிக்கடி இதுகுறித்துப் பேசிவந்தார். தன் மேனேஜரை தினமும் எஸ்.ஏ.சி. அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ராவுத்தருக்கு கால்ஷீட் தருமாறு விஜய்யிடம் எஸ்.ஏ.சி.யே பலமுறை கோரியும் விஜய் அதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. எஸ்.ஏ.சி. யின் நிலையில் இருந்து உணர்ந்தால்தான் இந்த வலி புரியும். ஒரு காலத்தில் விஜய்க்காக அவர்களிடம் உதவி பெற்றுக்கொண்டு, அதுவும் அஸ்திவாரம் கட்டுவதற்கான உதவியைப் பெற்றுக் கொண்டு, இன்று அவர்கள் வாழ்ந்து கெட்ட நிலையில் அவர்களுக்கு ஓர் உதவிக் கரம் கூட விஜய் மூலம் தன்னால் நீட்ட முடியாத நிலையில் எஸ்.ஏ.சி. தவித்தார். விஜய் இதில் ஒரு முடிவெடுப்பதற்குள் ராவுத்தரின் வாழ்வே முடிந்துவிட்டது.
இந்த அளவுக்கு அப்பாவையும், அப்பாவைச் சார்ந்தவர்களையும் தள்ளி வைத்தார். தனக்கென புதிய வட்டத்தைப் போட்டுக்கொண்டார் விஜய். அந்த புதிய வட்டம்தான் ஆபத்துகள் நிறைந்தது என்றும், அந்த வட்டத்துக்குள் வெறும் வர்த்தகம் மட்டுமே இருக்கும், நம்பிக்கை, நட்பு, விசுவாசம், நலம்விரும்பி என யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார் எஸ்.ஏ.சி.
ஆனால் விஜய்யின் வட்டம் அப்பா என்னும் ஆரம் இல்லாமலேயே விரிவடைந்துகொண்டிருக்கிறது.
(நாளை தொடரும்)
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 8]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 9]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 10]