எஸ்.ஏ.சி. விஜய்: இன்றைய வழக்கு-நாளைய தீர்ப்பு: மினி தொடர் -10

அரசியல் சிறப்புக் கட்டுரை

விஜய்க்கு வெற்றியுமல்ல… எஸ்.ஏ.சிக்கு தோல்வியுமல்ல

வேந்தன்

எஸ்.ஏ. சந்திரசேகரின் பரம ரசிகர் ஒருவர் இந்தத் தொடரைப் பற்றி நம்மிடம் பேசிக் கொண்டிருந்தபோது… “எஸ்.ஏ.சியின் படங்களில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற சில படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… படம் முழுதும் விறுவிறுப்பாக கொண்டு சென்று க்ளைமாக்ஸில் சொதப்பி விடுவார்”என்று கூறினார்.

அதேபோலத்தான்… இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் நவம்பர் 22 ஆம் தேதி அனுப்பிய இ-மெயில் கடிதத்தில், “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார். கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே தலைவர், பொருளாளர் விலகியதாலும், பெயரைப் பயன்படுத்தக் கூடாது என விஜய் எச்சரிக்கை விடுத்ததாலும் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி.

பெற்ற பிள்ளையிடம் அப்பாக்கள் தோற்பதில்லை… தோற்பது போல் தோன்றினாலும் அது தோல்வியல்ல. அந்த வகையில் இது விஜய்க்கு வெற்றியும் அல்ல… எஸ்.ஏ.சி.க்கு தோல்வியும் அல்ல.

வரலாறு எப்படி கிமு, கிபி என்று பிரிக்கப்பட்டிருக்கிறதோ அதேபோல ஒவ்வொரு ஆண்மகனின் வாழ்வும் திமு, திபி என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.அதாவது திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின். விஜய்யும் அப்படித்தான் திருமணம் முடிந்த பின் சிற்சில காலகட்டத்திலேயே தந்தையை விட்டு வீட்டளவில் விலகினார்.

ஆனால்… இன்று விஜய் மக்கள் மன்றம் என்ற அமைப்புக்கு அஸ்திவாரம் போட்டு, ஜல்லி கொட்டி, பில்லர் நட்டு, மணலாகி, சிமென்ட்டாகி, தண்ணீராகி, பொறியாளரும் ஆகி உயர்ந்த மாளிகையாக எழுப்பி வைத்தது எஸ்.ஏ.சி. என்ற தனி மனிதன் தான் என்பதில் விஜய்க்கே கூட மாற்றுக் கருத்து இருக்காது.

விஜய்யின் லவ் டுடே வெற்றி விழாவில் பேசிய அப்போதைய முதல்வர் கலைஞர், ‘லவ் டுடே பற்றி எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் லவ் யஸ்டர் டே’ என்று நகைச்சுவையாகக் கூறினார். அவருக்கு லவ் யஸ்டர்டே, லவ் டுடே, லவ் டுமாரோ என எல்லாம் தெரியும். ஆனபோதும் சுவாரஸ்யத்துக்காக கூறினார்.

அதுபோல விஜய் டுடேவுக்கு முந்தைய விஜய் யஸ்டர் டே முற்றிலும் எஸ்.ஏ.சி.யால் எழுப்பப்பட்டது என்பதை மறுக்க முடியாது. வீட்டுக்கு வரும் தன் தந்தையாரின் நண்பர்களிடம் கூட முகம் கொடுத்து கேஷுவலாக பேசத் தெரியாத ஒரு ரிசர்வ் டைப் பையன் தான் விஜய்.

பூவே உனக்காக படத்துக்குப் பின் விஜய்க்கு ரசிகர்கள் பல பகுதிகளிலும் பெருகி அவர்கள் விஜய்யை மெல்ல மெல்ல கொண்டாட ஆரம்பித்தபோது கூட, விஜய்க்கு அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு கொள்ளளவு இல்லை.

அப்போதெல்லாம் விஜய்யின் ஆகப்பெரிய ரசிகர் மன்ற வேலை என்னவென்று கேட்டால்…தன்னைச் சந்திக்க வரும் ரசிகர்களுடன் சில நொடிகள் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதுதான். அவர்கள் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும் விஜய்யின் ஒரே பதில், ‘அப்பாவைப் பாத்துடுங்க’ என்ற இரண்டு வார்த்தைகள்தான். மற்ற எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர்தான். எங்கெங்கோ கிடந்த விஜய் ரசிகர்களை ஒரு அமைப்பாக்கி ஒருகுடையாக்கி ஒரு நிறுவனமாக்கியவர் எஸ்.ஏ.சி.

இதெல்லாம் 2010 வாக்கில் கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறியது. நேற்று இல்லாத மாற்றம் என்னது என்பதைப் போல விஜய்க்குள் ஒரு வேதியியல் மாற்றம் நிகழத் தொடங்கியது.

எதற்கெடுத்தாலும், ‘அப்பாவைப் பாத்துடுங்க’ என்றே சொல்லிக் கொண்டிருந்த விஜய் ஒரு கட்டத்தில், “ அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அடிக்கடி டென்ஷனாயிடுறாரு. அதனால அவரைக் கூப்பிட்டு மன்றத்து நிகழ்ச்சியெல்லாம் நடத்த வேணாம். அவர்கிட்ட மன்ற விஷயங்களைப் பேச வேணாம்”என்று சொல்லும் அளவுக்கு விஜய் முன்னேறிவிட்டார். எஸ்.ஏ.சி.தனக்காக கதை கேட்கும் கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

’கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து அது பறந்து போயிடுத்து’ என்பதைப் போல விஜய் என்னும் கிளிக்கும் இறக்கைகள் முளைத்தன. ரசிகர் மன்ற வானத்தில் அது பறக்க ஆரம்பித்தது. ஆனபோதும் அண்ணாந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தது எஸ்.ஏ.சி. என்னும் தந்தைக் கிளி.

ஒரு கட்டத்தில் விஜய்யின் உயரம் பார்க்காமல் தன் உயரத்தை மட்டுமே நினைவில் வைத்திருந்த தந்தைக் கிளி, விஜய்யிடம் கேட்டது ஒரு கால்ஷீட்.

ஆரம்பகாலத்தில் விஜய்யை வைத்து இயக்கி அவரை அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி. தற்போது மெகா ஹிட் ஹீரோ ஆகிவிட்ட விஜய்யிடம் தான் இயக்கித் தயாரிப்பதற்காக ஒரு கால்ஷீட் கேட்டார். அதற்கு விஜய் என்ன பதில் சொன்னார்?

(நாளை தொடரும்)actor vijay sa chandrasekar party clash 10

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 8]

[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 9]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0