இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு பெயர் மாற்றம்… அண்ணாவை நினைவுகூர்ந்த விஜய்

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-ஆவது பிறந்தநாள் விழா இன்று (செப்டம்பர் 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி அவர்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய், அண்ணாவின் பிறந்தநாளை ஓட்டி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. ‘மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளில், ஆற்றிய பணிகளை போற்றி மகிழ்வோம்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி மற்றும் பாடலை விஜய் வெளியிட்டார். இந்த பாடலின் நடுவே “மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரிகள் வரும்போது, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் நடுவே விஜய் இருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதன்மூலம் அண்ணா, எம்ஜிஆரை பின்பற்றி விஜய் அரசியல் பாதையில் பயணிப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், அண்ணாவின் இருமொழிக்கொள்கை, தமிழ்நாடு பெயர் மாற்றம் போன்ற கொள்கைகளை குறிப்பிட்டு விஜய் அண்ணாவை நினைவுகூர்ந்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை” – திருமாவளவன்

“அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர்” – மகாவிஷ்ணு வாக்குமூலம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts