நடிகர் விஜய் கட்சிப் பெயரானது சமூகவலைதளங்களில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என அதிகாரப்பூர்வமாக திருத்தம் செய்து பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை நடிகர் விஜய் அறிவிக்கும் போதே சர்ச்சை ஏற்பட்டது.
கட்சியின் பெயரில் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து நமது ‘மின்னம்பலம் தமிழ்’ யூடியூப் சேனலுக்கு கல்வி சாலை கதிரவன் அளித்த பேட்டியிலும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயரில் பிழை திருத்தம் உள்ளது வெற்றி+கழகம் வெற்றிக் கழகம் என்று தான் வரும்” என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 17ஆம் தேதி செய்தித்தாளில் தென் சென்னை மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு வெளியிடப்பட்ட விளம்பத்தில் கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அதிலும் வாழ்த்துகிறோம் என்பதற்கு பதிலாக ‘வாழ்த்துக்கிறோம்’ என்றும், வழிகாட்டி என்பதற்கு பதிலாக ’வழிக்காட்டி’ என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பு ஆதரவாளர் விக்னேஷ்வரனை தொடர்புகொண்டு பேசிய போது, “கட்சியின் பெயரில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நேர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, தமிழ் அறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியின் எக்ஸ் வலைதளம், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ’தமிழக வெற்றிக் கழகம்’ என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதியோர்களுக்கான உதவித்தொகை ஏழு மாதங்களாக நிறுத்தம்!
முக்கிய நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும் உக்ரைன்: என்ன காரணம்?