நடிகர் விஜய், எம்.ஜி.ஆர் போன்ற மனம் கொண்டவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
மதுரையில் மேற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நாகதீர்த்தம் அருகே பாலம் கட்டும் பணியை இன்று (ஜூன் 18) அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டதாக கூறுகிறது. அவர்கள் ஒன்றும் தனித்து நின்று வெற்றி பெறவில்லை. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தான் வெற்றி பெற்றார்கள்.
திமுக வளர்ச்சி அடைந்து விட்டதாக கூறுகிறார்கள். தேர்தல் முடிவில் திமுகவினர் உண்மையாகவே மகிழ்ச்சியாக உள்ளார்களா? இது உண்மையான வெற்றி இல்லை. இது வாங்கப்பட்ட வெற்றி.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தமிழகத்தில் 37 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றது. அப்போது, தமிழகத்தில் அதிமுக தான் ஆளுங்கட்சி. அப்படி பார்த்தால், இந்த தேர்தலிலும் திமுக தனித்து நின்றிருக்க வேண்டும். செல்வாக்கு உயர்ந்ததாக கூறுகிறார்கள். பின்னர் ஏன் தனித்து போட்டியிடவில்லை.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். சில அமைச்சர்கள் அதற்கும் மேல் சென்று 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு பேராசை.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதற்கு தனித்தனி கொள்கை. கூட்டணியில் உள்ள அனைவரும் திராவிட கொள்கை என்றே வைத்துக் கொள்ளலாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் 2 ஆளுங்கட்சிகளை எதிர்த்து களமிறங்கி உள்ளார். பணபலத்தை எதிர்த்து அதிமுகவினர் களமிறங்கி உள்ளனர். எனவே, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர், பெண் காவலர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. அதனால், மக்கள் நிச்சயமாக சட்டமன்ற தேர்தலில் நல்ல முடிவை எடுப்பார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற ஜெயலலிதாவின் முடிவை மீறி தவறு செய்துவிட்டதாக தற்போது தோன்றுகிறது. தமிழக மக்கள் தற்போது வரை பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு மதத்தின் கொள்கைகளை முன்வைத்து நடத்தப்படும் கட்சி பாஜக. அதிமுக ஒரு மதசார்பற்ற கழகம். தமிழக மக்கள் எப்போதும் மதசார்பற்றவர்களைதான் தலைவர்களாக ஏற்பார்கள். எந்த தலைவர்கள் வந்தாலும், மதவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பாஜக தமிழகத்தில் வளரவே வளராது.
அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் 3வது இடத்திற்கு சென்றதற்கு காரணம், நாங்கள் மக்களிடம் தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று கூறினோம். திமுகவினர் மோடியை எதிர்ப்போம் என்று கூறினார்கள். தமிழர்கள் பாஜகவை புறக்கணிப்பதால் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர்.
நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். போன்ற மனம் கொண்டவர். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு நல்லது செய்ய முன்வந்துள்ளார். அவர் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அதிமுகவின் நிரந்தர எதிரி திமுகதான்.” என செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜூலை 10ல் கலைஞரின் கனவு இல்ல திட்டம் : ரூ.3,100 கோடி ஒதுக்கீடு!