விஜய்யும் அரசியலும்!

Published On:

| By Kavi

1992ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகரான விஜய், தற்போது தனது 67ஆவது படமான லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தனது 30 வருட சினிமா வாழ்க்கையின் மூலம் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், கோடிகளில் வருமானம் வாங்குபவராகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். 2013 முதல் ட்விட்டர் கணக்கை மட்டும் வைத்திருந்த விஜய் ஏப்ரல் 2ஆம் தேதி இன்ஸ்டா கணக்கை தொடங்கினார்.

தொடங்கிய 99 நிமிடத்தில் அவரை ஒரு மில்லியன் பேர் ஃபாலோ செய்தனர். இவ்வளவு விரைவில் அதிக ஃபாலோயர்களை கொண்ட இந்திய நபர் என்ற பெருமையை பெற்றார்.
உலக அளவில் அதிகவேகமாக 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றவர்கள் பட்டியலில் கொரியன் இசைக்குழுவான பிடிஎஸ் குழுவைச் சேர்ந்த வி எனப்படும் கிம் டேஹ்யுங் முதலிடத்தில் உள்ளார். அவர் 43 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருந்தார். அடுத்தபடியாக 59 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

99 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் என்ற கணக்கில் விஜய் மூன்றாவது இடத்தை பிடித்தார். 4 மணி நேரத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றார். இன்று வரை அவரை 6.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராம் தொடங்கிய போது, ;வணக்கம் நண்பாஸ் மற்றும் நண்பிஸ்’ என்ற கேப்ஷனுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தனது புகைப்படத்தையும் வெளியிட்டார். அது லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.


இன்ஸ்டாகிராமில் இப்படி தனக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு உத்தரவிட்டார்.

ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை கொண்டாடவும், ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று முதல் மே இறுதி வரை விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டவும் உத்தரவிட்டார்.
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் கடலூர் மாநகரம் போஸ்ட் ஆஃபீஸ், விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2023ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடவும், அம்பேத்கரின் கொள்கைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்ற இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவும், இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டத்தை கூட்டுகிறார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது. எதிர்காலத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகிறோம்” என விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் கூறப்படுகிறது.
ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த நகர்வு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பு இப்போதல்ல 2008ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலையின் போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார் விஜய்.


இதையடுத்து 2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக அறிவித்தார். இந்த இயக்கத்துக்கு தனிக்கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பின் பேரில் அவரை சென்று சந்தித்தார் விஜய்.

2014ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, கோவையில் வைத்து அவரை சந்தித்தார் விஜய். அதுபோன்று 2022ஆம் ஆண்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரையும் சந்தித்தார்.

இப்படி ஒவ்வொரு சந்திப்பின் போதும், விஜய் யாரை சந்திக்கிறாரோ அவர்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என கேள்வி எழுவதும், அதற்கு விஜய் தரப்பில் மறுப்புத் தெரிவிப்பதும் தொடர்ந்து வந்தது.


ஆனால் 2021ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 இடங்களில் வெற்றி பெற்றனர்.

அதைத்தொடர்ந்து பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வரும் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ்களை குவித்திருப்பதும், அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடியிருப்பதும் தமிழக அரசியலில் கவனத்தை பெற்றுள்ளது.

பிரியா

இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா!

அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share