பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கலைஞருடனான தனது அனுபவங்கள் குறித்து மிகவும் எமோஷனலாக பேசினார்.
ரஜினிகாந்த் பேசியபோது, “கலைஞர் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அரைமணி நேரம் பேசியிருக்கிறார் என்று சொன்னால், அது ராஜ்நாத் சிங் மட்டும் பேசியிருக்க மாட்டார், மேலே இருந்து உத்தரவு வந்திருக்கும். இந்த மாதிரி அனைவரும் பாராட்டி மகிழக்கூடிய நபர் கிடைக்கக்கூடியது அபூர்வம்.
கலைஞர் சந்தித்த விமர்சனங்களையும், சோதனைகளையும் வேறு யாராவது சந்தித்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். விமர்சனங்கள் என்பது மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக்கூடாது. புயல் மாதிரி இருந்தால், மரங்களே சாய்ந்துவிடும். ஆனால், கலைஞர் ஒரு ஆலமரம். வேர் மிகவும் ஸ்ட்ராங்கானது.
கலைஞர் ஊக்குவித்த உடன்பிறப்புகளாகிய உங்களை யாராலும் அசைக்க முடியாது. இல்லையென்றால் 12, 13 வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் கூட ஒரு கட்சியை காப்பாத்த முடியுமா?
ஐந்து வருடம் ஆட்சியில் இல்லை என்றால் கூட தற்போது திண்டாடுகிறார்கள். அவர் இறந்தபிறகு, இன்னும் புகழ் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அவரைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞரை நிறைய பேட்டி எடுத்த ஒரு பத்திரிகை நண்பரிடம், விமர்சனங்களை கலைஞர் எப்படி எடுத்துக்கொள்வார் என்று கேட்டேன். யார் விமர்சனம் எழுதுகிறார்கள் என்று கலைஞர் பார்ப்பார். அவருடைய பின்னணியை செக் செய்வார்.
உண்மையிலேயே அறிவு சார்ந்து விமர்சனம் செய்தால், கலைஞர் அவர்களுக்கு பதிலளிப்பார். அதேநேரத்தில் உள்நோக்கத்துடன் எழுதியிருந்தால் திருப்பி அந்த விமர்சனத்தை படிக்க மாட்டார். அது மிகப்பெரிய ஒரு குணம்.
அவர் அடிக்கடி பிரஸ்மீட் செய்வார். ஆனால், இப்போது யாரும் பிரஸ்மீட் செய்வதில்லை. கலைஞருக்கு பிரஸ்மீட் செய்வது யானைக்குகரும்பு மாதிரி. அவ்வளவு எளிதாக டீல் செய்வார்.
கலைஞர் எப்போது என்னை சந்தித்தாலும் சந்தோஷத்துடன் வரவேற்பார். ஆனால், இரண்டு முறை அவர் சோகமாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, ரொம்ப சோகமாக இருந்தார். வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியபோது சோகமாக இருந்தார். இந்த இரண்டு முறை மட்டும் தான் அவர் சோகமாக இருந்ததை நான் பார்த்தேன்.
அரசியல்வாதிகளை விமர்சித்து எடுத்தப்படம் சிவாஜி. அந்தக்கதை தெரிந்திருந்தும் கலைஞர் அந்த படத்தைப் பார்த்தார். படத்தை பார்த்த கலைஞர், ‘நமக்கும் நல்லது பண்ணும்னு’ ஆசை என்று பெருமூச்சு விட்டார். அந்த மூச்சில் பல ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது.
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மருத்துவமனைக்கு வந்து கண்ணீரோடு என் கையை பிடித்து ஆறுதல் சொன்னவர் கலைஞர். அவரது கை பூவை விட சாஃப்டாக இருந்தது. என் வாழ்க்கையில் அவர் விட்ட கண்ணீரை மறக்கவே முடியாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிள்ளை போல கவனித்துக் கொண்ட வேலு: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய ரஜினி
பாடாய்ப்படுத்தும் சீனியர்கள்… அசால்டாக சமாளிக்கும் ஸ்டாலின்… ரஜினி கலாய்!