விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலமானார். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் நாகர்கோவிலில் இருந்து இன்று சென்னை வருகிறார்.
அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி உள்ள ஒரு மனிதர். எப்படியாவது உடல் நலம் தேறி வந்துவிடுவார் என்று நினைத்தோம்.
ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் அவரை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது. அவர் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார்.
அந்த பாக்கியத்தை தமிழக மக்கள் இழந்துவிட்டோம். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி!
இயல்பு நிலைக்குத் திரும்பிய கோவில்பட்டி: ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி!