சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெலங்கானா அமைச்சர் சுரேகா தெரிவித்த நிலையில் அவருக்கு சம்பந்தப்பட்ட நாகர்ஜுனா, சமந்தா மற்றும் நாக சைதன்யா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா நேற்று (அக்டோபர் 2) செய்தியாளர்களை சந்தித்தபோது, “நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கூறியது தெலுங்கு சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்து முற்றிலும் தவறானது – நாகர்ஜுனா
அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த கருத்துக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கூறியுள்ளார் நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகர்ஜுனா,
அதில் “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள்.
தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதியுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்துக்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
என் பெயரை அரசியல் சண்டைகளில் பயன்படுத்தாதீர்கள் : சமந்தா
அதே போன்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஒரு பெண்ணாக, வெளியே வந்து பணிபுரிய, பெண்கள் வழக்கமாக போகப் பொருளாக நடத்தப்படும் ஒரு கவர்ச்சிகரமான துறையில் பிழைத்திருப்பதற்காக, காதலில் விழுந்து, அதிலிருந்து வெளியேறி, எழுந்து நின்று சண்டையிடுவதற்காகவும், நிறைய துணிச்சலும், வலிமையும் தேவை.
இந்த பயணம் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன். தயவு செய்து அதனை சிறுமைப்படுத்திவிடாதீர்கள்.
ஒரு அமைச்சராக உங்களுடைய வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தனிநபர்களின் சுதந்திரத்தை மதித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விவகாரம், அது குறித்த ஊகங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கமாகவும் நடந்த ஒன்று. அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை அரசியல் சண்டைகளில் பயன்படுத்த வேண்டாம்” இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
மீடியா ஹெட்லைனில் வர… – நாக சைதன்யா
நடிகர் நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛விவாகரத்து என்பது அதிக வலி கொடுக்கும் ஈஸியான வலி மட்டுமின்றி வாழ்க்கையில் துரதிர்ஷ்டமான ஒரு முடிவாக இருக்கிறது. பல சிந்தனைகளுக்கு பிறகு பரஸ்பரமாக நானும், எனது முன்னாள் மனைவியும் (சமந்தா) இந்த முடிவை எடுத்தோம்.
இந்த விவாகரத்து என்பது அமைதி, இருவரின் வேறுபட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தை மனதில் வைத்து இருவரும் ஒவ்வொருவருரின் எண்ணங்களை புரிந்து கொண்டு எடுத்த முடிவாகும். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் அபத்தமான மற்றும் ஏற்க முடியாத வதந்திகள் பரப்புகிறது.
எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மதிப்பளித்து நான் இதுபற்றி வெளியில் எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால் இன்று, அமைச்சர் கொண்டா சுரேகா தவறான தகவலை கூறியது மட்டுமில்லாமல், அபத்தமான, ஏற்க முடியாத கருத்தை தெரிவித்துள்ளார்.
பெண்கள் என்றைக்குமே மதிக்கப்பட வேண்டியவர்கள். மீடியாவில் ஹெட்லைனில் வர வேண்டும் என்பதற்காக செலிபிரிட்டிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அட்வான்டேஜ் எடுத்து கொள்வது இழிவானது’ என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சருக்கு நோட்டீஸ் : கேடிஆர்
இதற்கிடையே தன்னை அவதூறாக விமர்சித்ததற்காக சந்திரசேகரராவ் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் தனது வழக்கறிஞர் மூலமாக அவதூறு வழக்கு தொடர்வது சம்பந்தமாக அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “கேவலமான அவதூறுக்காக காங்கிரஸ் அமைச்சருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உங்கள் அமைச்சர் மற்றும் முதல்வரை ஒரு மனநல நிபுணர் அல்லது மறுவாழ்வு சிகிச்சையாளரிடம் அனுப்புங்கள் என ராகுல்காந்தியையும் அறிவுறுத்தியுள்ளார்.
-அம்பலவாணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’அதிகாரத்த கையில எடுக்கிறது தப்பே இல்ல’: என்கவுன்ட்டருக்கு வேட்டையன் ரஜினி ஆதரவு!
ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு: பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
மாநகராட்சிகளில் அமலுக்கு வந்தது தாமத வரிக்கு ஒவ்வொரு மாதமும் அபராதம்!
ஹெல்த் டிப்ஸ்: பல் சொத்தை வராமல் தடுக்க… இதைக் கடைப்பிடியுங்கள்!