மாற்றுப்பள்ளியில் சக்தி பள்ளி மாணவர்கள் படிக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ்

அரசியல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம் தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியமூர் சக்தி மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டுத் தொடர்ந்து 5 நாட்களாகப் போராட்டம் நடத்தப்பட்டது. 5ஆவது நாளாக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய பதிலளிக்கக் கூடிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எங்கே போனார்? ஏன் இன்னும் மாணவியின் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்விகளை எழுப்பினர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கேள்விகள் அணிவகுத்தன.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் முறையாக ஸ்ரீமதி மாணவி மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

“தனியார் பள்ளிகள் எங்களுடைய அனுமதி இல்லாமல் விடுமுறை விடக் கூடாது. மாணவர்களின் நலன் கருதிதான் இதைச் சொல்கிறோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தைப் பொறுத்தவரைத் தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். இன்று நேரடியாக ஸ்பாட்டுக்கு போகிறேன். மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.

கள்ளக்குறிச்சியில் சேதாரமடைந்த அந்த பள்ளி சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேசன் என இண்டர்நேஷனல் பள்ளியாக இருக்கிறது. இந்த பள்ளியின் சேதத்தைப் பார்க்கும் போது சரி செய்ய 2 மாதங்கள் ஆகும் போல் தெரிகிறது. எனவே அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிடக்கூடாது. அந்த பள்ளியைச் சுற்றி அரசுப் பள்ளிகள் என்னென்ன இருக்கிறது என மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பார்க்க சொல்லியிருக்கிறேன். மாணவர்களின் படிப்பில் கவனமாக இருக்கிறோம்.

ஸ்ரீமதியின் தாயாரின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் இன்று உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
11மணிக்குத் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் முதல்வர் மாவட்ட பொறுப்பு அமைச்சருடன் ஸ்பாட்டுக்கு சென்று நிலைமையைக் கவனித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்விக்கு என்ன செய்வது என பார்க்கச் சொல்லியிருக்கிறார்” என்றார்

இந்த விவகாரத்தில் மாணவி வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *