திமுக அமைச்சர் என்பதால் செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
இந்தசூழலில் அவருக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறி அழும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகைத் தந்து கொண்டிருக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிவிரைவுப் படையும் மருத்துவமனையில் குவிந்துள்ளது. சென்னை போலீசாரும் மருத்துவமனைக்கு வெளியே குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, ‘மனித உரிமை மீறல் நடந்துள்ளது. யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உரிமை இருக்கிறது. ஆனால் சரியான நடைமுறை செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறை பின்பற்றியதா இல்லையா என தெரியவில்லை. திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதற்கு யார் காரணமாக இருந்தாலும் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டும்.
நேற்று காலை முதல் இரவு 2 மணி வரை சோதனை நடத்தியிருக்கின்றனர்.
ஒரு அமைச்சர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டாரா? உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? எதற்காக ஐசியுவில் வைத்திருக்கிறோம். இதையெல்லாம் அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும்.
நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் இருக்கிறது. அத்து மீறி நடந்துகொண்டிருக்கின்றனர்.
என்ன காரணத்துக்காக அமலாக்கத் துறை வந்திருக்கிறது என்று தெரிந்தால்தானே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அமைச்சர் என்பதால் செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
பிரியா