‘ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கையா?’: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதில்!

அரசியல்

திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன.

இந்த தீர்ப்புகளுக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இது குறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஒரு பக்கம் திமுக அரசுக்கு ஆளுநர் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் மறுபக்கம் நீதித்துறையிலிருந்தும் இதே போல ஆரம்பித்திருக்கிறார்கள். என் மீது அவமதிப்பு வழக்குப் போட்டாலும் பரவாயில்லை நான் கடுமையாக விமர்சனம் செய்யப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதற்கு ஸ்டாலின் சரி கவனமாகப் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்படி நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, ’முன்னாள் அமைச்சர்களான ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் இது போன்ற வழக்குகளில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ அதே அடிப்படையில் தான் தற்போது அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்த திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது மட்டும் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறார். இது பழிவாங்கும் நடவடிக்கை போல் தான் இருக்கிறது.

இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம்” என்று பேட்டியளித்தார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. நான் சட்டப்படியான கடமையைச் செய்கிறேன். பொது வாழ்வில் இருப்பவர்கள் கருத்துச் சொல்வதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனைக் கருத்தில் கொள்ளவும் இல்லை. அவரது பேட்டியை பார்த்தேன். அதை பார்த்து நான் நிலைதவறி நடந்தால் நீதிபதி ஆனதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

பிக்பாஸ் சீசன் 7: இரட்டை கமல் கொடுத்த செம ட்விஸ்ட்!

சித்ரா வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *