ஆன்லைன் தடை சட்டம் இயற்றச் சட்டமன்றத்திற்கு உரிமை இல்லை என்று ஆளுநர் எந்த சட்டத்தின் மூலம் சொன்னார் என்று தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று (மார்ச் 10) சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, “2022 அக்டோபர் 1 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளித்துவிட்டார்.
அவசரச் சட்டத்திற்கும் ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பிய சட்டம் திருப்பி அனுப்பப்பட்டது.
ஆளுநர்கள் மாநில அரசோடும் அமைச்சர்களுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை சொல்லி இருக்கிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் ஒப்புதல் அளிக்கலாம், அது தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது அவரிடமே வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற சட்டமன்றத்திற்கே உரிமை இல்லை என்று அவர் எந்த சட்டத்தின் அடிப்படையில் சொன்னார் என்று தான் தெரியவில்லை.
சட்டமன்றம் புனிதமானது, மாண்புடையது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம்.
இந்த சட்டம் முன்வடிவை 2022 அக்டோபர் 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டுவரும் போது ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கொண்டு வரவில்லை. நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து, ஆன்லைன் ரம்மி தேவையா இல்லையா என்று 10,735 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
அதில் 10,708 பேர் முழுமையாக ரத்து செய்யுங்கள் என்று சொன்னதன் அடிப்படையிலும் நீதியரசர் சந்துரு பரிந்துரையின் அடிப்படையிலும் தான் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. இதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இதை எதையும் ஆய்வு செய்யாமல் ஆளுநர், 2022 அக்டோர் 1 ஆம் தேதி ஒரு நிலைப்பாடும், 2023 மார்ச் 8 ஆம் தேதி எங்களுக்கு திருப்பி அனுப்பிய தபாலில் ஒரு நிலைப்பாடும் இருப்பது, அவர் இந்த சட்டத்திற்கு எதிராகத் தான் இருந்திருப்பார் என்று தான் எனக்கு தோன்றுகிறது.
ஆனால் ஆளுநருக்கு என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்ட நிர்வாகத்தினர் ஆளுநரை சந்தித்ததாக செய்திகள் வந்தது. அவர்களுடன் என்ன பேசினார் என்று தெரியவில்லை.” என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
மோனிஷா
என்.எல்.சி-க்கு எதிராக போராட்டம்: எடப்பாடி பழனிசாமி
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: சந்திரசேகர ராவ் மகள் உண்ணாவிரதம்!