ஓட்டுக்கு 500… பட்டுவாடாவை தொடங்கிய தாமரை- ஷாக் திமுக
“ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம்” என்றெல்லாம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீர வசனங்களை பேசிக் கொண்டிருக்கும் நிலையில்…
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தொடங்கி விட்டார் பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிற ஏசி சண்முகம்.
புதிய நீதி கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 10 ஆம் தேதி பிரதமர் மோடியே வேலூருக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஏ. சி சண்முகத்துக்கு மோடி எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்றால் முன்னதாக பாமக தலைவர் அன்புமணி தரப்பில் பிரதமர் மோடியிடம் தர்மபுரி தொகுதிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
‘தர்மபுரியில் நமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக இருக்கிறது. நீங்கள் தமிழ்நாடு வரும்போது தர்மபுரி தொகுதிக்கு வந்து பரப்புரை செய்தால் தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியாவின் வெற்றி மேலும் உறுதிப்பட்டுவிடும்’ என்று மோடியிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அன்புமணி.
ஆனால், ’எங்களது சீனியர் நண்பரான ஏ.சி. சண்முகத்துக்காக வேலூர் வரத் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி. அங்கே இருந்தபடியே வட மாவட்ட எம்பிக்களுக்கான வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்தை செய்யலாம். எனவே நீங்கள் வேலூருக்கு வந்து விடுங்கள்’ என்று பாஜக தரப்பில் அன்புமணிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த அளவுக்கு பிரதமர் மோடியின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்கிற ஏ.சி.சண்முகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடங்கி இருக்கிறார்.
இது குறித்து வேலூர் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம். “ஏப்ரல் 12ஆம் தேதி இரவில் இருந்து வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் பண விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி அவ்வளவு கட்டமைப்பு வாய்ந்த கட்சி அல்ல. ஆனாலும் அவரது கல்வி நிறுவன ஊழியர்கள், மற்றும் அவர் சார்ந்த சமுதாய சங்கத்தினர் ஆகியோரோடு தொகுதி முழுவதும் ஓரளவு கட்டமைப்பை வைத்திருக்கும் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் இணைந்து ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் பண விநியோகத்தை தொடங்கிவிட்டனர்.
வெளிப்படையாக திமுகவினர் என்று அறியப்பட்டவர்கள் தவிர, மற்ற அனைவருக்கும் பணம் தருமாறு சண்முகம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 70% சதவீத வாக்காளர்களுக்கு பண விநியோகம் வேலூரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, நேற்று இரவு என இரண்டு இரவுகள் தாமரை சின்னத்துக்காக வேலூரில் ஓட்டுக்கு 500 ரூபாய் பட்டுவாடா ஆகிவிட்டது. இதையறிந்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து வேட்பாளரான கதிர் ஆனந்திடமும் அவரது தந்தையான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடமும் நேற்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், ‘நாம எப்ப கொடுக்கப் போறோம்னு மக்கள் கேட்குறாங்க’ என்பதையும் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதற்கு துரைமுருகன், ‘முதலமைச்சர் கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கிறார். இந்த முறை வாக்குக்கு பணம் அளிக்க கூடாது. அப்படி ஏதாவது வருமானவரித் துறையில் பிடிபட்டால் அது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு அவப் பெயராகிவிடும். மேலும், அதை வைத்துக் கொண்டே சில தொகுதிகளில் தேர்தலை நிறுத்த பிஜேபி திட்டம் போட்டிருக்கிறார்கள். அதனால் பணம் கொடுக்க வேண்டாம் என தலைவர் சொல்லியிருக்கிறார்’ என்று தெரிவிக்க திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார் தரப்பில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. மாசெ நந்தகுமார் நடத்திய ஆலோசனையில், ‘அவர்கள் பணம் கொடுத்து விட்ட பிறகு நாம் கொடுக்கவில்லை என்றால் சரியாக இருக்காது. கடந்த தேர்தலிலேயே சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளோம். எனவே இந்த முறை பணம் கொடுத்து தான் ஆக வேண்டும். நாளை ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் அஷ்டமி தொடங்குகிறது. அதிலிருந்து இரண்டு நாள் அஷ்டமி நவமி ஆகிவிடும். எனவே இன்றே ஆரம்பிக்க வேண்டும்’ என்று ஆலோசித்திருக்கிறார்கள்.
இன்னமும் தலைமையிடம் இருந்து சிக்னல் வரவில்லை என்கிறார்கள் வேலூர் திமுகவில். இந்த அளவுக்கு வேலூரில் பாஜகவின் பணப்பட்டுவாடா பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்கள் வேலூரின் அரசியல் முக்கியஸ்தர்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமன்னா, ராஷி கண்ணா கலக்கல் நடனம்… அரண்மனை 4 ‘அச்சச்சோ’ சாங் இதோ..!
CSK Vs MI: பர்ஸ்ட் டைம் இப்படி நடக்குது… கவலையில் ரசிகர்கள்!