ஒடிசாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் மனித உரிமைக் காப்பாளர்களை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கால் பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்ரவரி 12) இந்திய அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒடிசா மாநிலத்தில் செயல்படும் “Citizen’s Forum” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதிப்தா ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடிமைச் சமூக அமைப்பினர், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரிட்டோ மற்றும் கணேசன் ஆகிய இருவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சுரஜ்சித் மஜூந்தார் துவக்க உரையாற்றினார்.
அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய சாராம்சங்களை மையப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து பேராசிரியர் பேசுவதற்கு குறுக்கீடு செய்தார்.
அவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதிப்தா கேள்வி கேட்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பிரதிப்தாவின் பதிலை கேட்காமல் அவர் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அவருடன் சேர்ந்து இரண்டு நபர்கள் பேராசிரியர் சுரஜ்சித் மஜூந்தார் பேசிக்கொண்டிருந்த மேடை நோக்கி வந்தனர்.
பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற கூட்டங்களை நடத்தக்கூடாது என்று அவர்கள் பேராசிரியரை மிரட்டும் தொனியில் பேசினர். மேலும், தங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் என்று அறிவித்தனர்.
பின்னர் பிரதிப்தா மற்றும் பேராசிரியர் சுரேந்திர சேனாவை அவர்கள் கடுமையாக தாக்கினர். அதனை தடுக்க சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பிரிட்டோவையும் தாக்கினர்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் நடத்திய தாக்குதலை மனித உரிமை செயற்பாட்டாளர் கணேசன் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார்.
அவரிடம் இருந்து செல்போனை பறித்த ஏபிவிபி நிர்வாகிகள் அதனை மாறி மாறி மற்றவர்களுக்கு கடத்தினர். கணேசன் அவர்களிடமிருந்து போராடி செல்போனை மீட்டபோது அவர் மீதும் தாக்குதல் தொடுத்து துரத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாகித் நகர் காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி நிர்வாகிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பிரதிப்தா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் கணேசன், “இந்தியாவின் அரசியலமைப்பு குறித்து மாணவர்களிடம் பேசுவதற்கு கூட இவ்வளவு போராட வேண்டியுள்ளது. ஒடிசாவில் பாஜக ஆட்சியில் இல்லாதபோது கூட காவல்துறை அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்துவிட்டனர்.
எங்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முதல் தகவல் அறிக்கை முறையாக பதிவு செய்யப்பட்டதா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.” என்று தெரிவித்தார்.
செல்வம்