ஜே.என்.யுவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், பல்கலைக் கழகத்தில் பெரியார் கருத்தரங்கு நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஜே.என்.யு எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக் கழகமாக இருக்கிறது.
1:10 என்ற ஆசிரியர் மாணவர்கள் ரேசியோ அடிப்படையில் செயல்படும் இந்த பல்கலைக் கழகம், இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழக வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 2017ல் இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகம் என்று குடியரசுத் தலைவரிடம் இருந்து விருது பெற்றது.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த பல்கலைக் கழகத்தில் அவ்வப்போது மாணவ அமைப்புகளிடையே மோதல்கள், வெறுப்பு பிரசாரங்கள் போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் நடந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
என்ன நடந்தது?
ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சங்கத்துக்காக டெஃப்லாஸ் என்ற அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலக அறையில் புத்தக விவாதங்கள், படங்களை திரையிடுவது போன்ற நிகழ்வுகளை நடத்தி வரும் 100 மலர்கள் என்ற குழு ‘ஜனே பி தோ யாரோ’ என்ற தலைப்பில் ஒரு படத்தை திரையிட திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்காக ஞாயிறு இரவு 9 மணியளவில் டெஃப்லாஸ் அலுவலகத்தில் கூடியிருந்தது 100 மலர்கள் குழு. படத்தை திரையிடுவதற்காக சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட தலைவர்களின் படங்கள் கழட்டி நாற்காலியில் வைக்கப்பட்டிருந்தன.
மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் படங்களும் இருந்தன.
அப்போது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சத்ரபதி சிவாஜி பிறந்தநாளை (பிப்ரவரி 19) முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவிக்க அங்கு வந்ததாகவும், அந்த சமயத்தில் சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் கீழே வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், 100 மலர்கள் குழுவினரை தாக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்த பெரியார் உள்ளிட்டோரின் படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பல்வேறு மாணவர்கள் காயமடைந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாணவரான நாசர் முகமது மொய்தீனும் காயமடைந்தார். அவருக்கு தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாசருக்கு சம்பவம் நடந்த ஞாயிறு இரவு சஃதார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தாக்குதல் குறித்து மாணவர்கள் தரப்பில், சமீபத்தில் மும்பை ஐஐடியில் சாதிய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட 18 வயது தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி நினைவாக ஒரு கூட்டம் நடத்த கூடியிருந்தோம்.
சத்ரபதி சிவாஜி நிகழ்ச்சிகாக ஏபிவிபி அமைப்பினர் டெஃப்லாசுக்கு வந்தனர். அப்போது, கம்யூனிஸ்டுகளை தூக்கிலிட வேண்டும், ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோரை தூக்கிலிட வேண்டும் என்று சுவர்களில் எழுதினர். ஜானே பி தோ யாரோ படத்தின் திரையிடல் தொடங்கவிருந்தபோது, ஏபிவிபி அமைப்பினர் தாக்கத் தொடங்கினர் என கூறுகிறார்கள்.
பெரியார் சிலையை உடைத்தது யார்?
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூலக்கூறு மருத்துவம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும். தமிழக மாணவர் நாசர் கூறுகையில், நான் டெஃப்லாஸ் அலுவலகத்துக்குச் சென்ற போது பெரியார், மார்க்ஸ், லெனின் ஆகியோரது படங்கள் சேதமடைந்து கிடப்பதைக் கண்டேன். இப்படி யார் செய்தது என்று கேட்டேன். அங்கிருந்த ஏபிவிபி அமைப்பினர் நாங்கள்தான் செய்தோம் என்று கூறி கனமான பொருளை கொண்டு என்னைத் தாக்கத் தொடங்கினர். நான் காயமடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படும் போது ஆம்புலன்ஸை வழிமறித்து பிரச்சினை செய்தனர் என்று தெரிவித்துள்ளார்.
தி இந்து தமிழிடம் நாசர் கூறுகையில், 2020 முதல் ஏபிவிபி அமைப்பினர் இதுபோன்று தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தென் இந்தியாவில் இருந்து ஏன் இங்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கேரள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராக தமிழர் வந்தும் எங்களுக்கு இந்த நிலை. தமிழக அரசு சார்பில் ஜே.என்.யு. பல்கலைக் கழகத்துக்கு 5 கோடி ரூபாய் கொடுத்தும் எங்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து 100 மலர்கள் குழு இன்று (பிப்ரவரி 21) தனது முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளது.
100 மலர்கள் அமைப்பு விளக்கம்!
அதில், ‘ஜனே பி தோ யாரோ’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத் திரையிடலை ஏற்பாடு செய்து, அதற்காக விளம்பரமும் செய்யப்பட்டது. ஏபிவிபி உள்ளிட்ட அனைத்து மாணவர்கள் குழுவின் உறுப்பினர்கள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழு உள்ளது. அதில், இந்த திரையிடல் குறித்தும் தெரிவிக்கப்பட்டு முன்கூட்டியே டெப்லாஸ் அலுவலகம் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அன்றைய தினம் நிகழ்ச்சி தொடங்கியதும் , ‘சிவாஜி’ மற்றும் ‘மஹாராணா பிரதாப்’ ஆகியோரை நாங்கள் இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டி ஏபிவிபி அமைப்பினர் தாக்க தொடங்கினர்.
இதில் நாசர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது ஏபிவிபி அமைப்பினர்கள் எங்களது செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டனர். ஏனென்றால், கடந்த 2022 நவம்பர் 14ஆம் தேதி அந்த அமைப்பினரால் இதுபோன்று ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் பல வீடியோக்கள் வெளியாகின. இதனால் நேற்று எங்களது செல்போன்களை பிடுங்கிக் கொண்டனர்.
ஒவ்வொரு முறையும் இந்த அறையில் திரையிடும் போது அங்கிருக்கும், பல்வேறு சித்தாந்தங்களை கொண்ட தலைவர்களின் படங்களை கழற்றி வைப்பதும், திரையிடலுக்கு பிறகு மீண்டும் சுவற்றில் மாட்டுவதும் வழக்கம் தான். அதுபோன்றுதான் அன்றைய தினம் நடந்தது. அதைத்தவிர தலைவர்களின் புகைப்படங்களை நாங்கள் சேதப்படுத்தவோ அவமதிக்கவோ இல்லை.
இந்த தாக்குதலை கண்டித்து பிற மாணவர்கள் அமைப்புடன் கலந்து ஆலோசித்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும். இந்த சம்பவத்தின் போது காவல்துறையினரும், பாதுகாவலர்களும் வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தார்கள் என பதிவிட்டுள்ளனர்.
ஏபிவிபி மறுப்பு!
இதுகுறித்து பல்கலைக் கழக ஏபிவிபி மாணவர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆதர்ஷ் ஜா கூறுகையில், இடதுசாரி மாணவர்கள் அமைப்பினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சத்ரபதி சிவாஜியின் உருவப்படத்தை வைக்கச் சென்றபோது இடதுசாரி மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களைத் தாக்கினர். கடந்த ஆண்டு மஹா ராணா உருவப்படத்தை வைக்கச் சென்ற போதும், இதுபோன்று நடந்தது என 100 மலர்கள் குழு அமைப்பினர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
ஜே.என்.யு விளக்கம்
பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) டெஃப்லாஸ் மையத்தில் மாணவர்கள் சிலரும் வெளியாட்களும் சேர்ந்து ஒழுங்கீனமற்று நடந்துகொண்டுள்ளனர். அந்த சமயத்தில் நமது தேசிய தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது. இந்த நிகழ்வை தீவிரமாக விசாரிக்க துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜே.என்.யு.வில் நடந்த சம்பவத்துக்கும், தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களான முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பல்கலைக் கழகங்கள் வெறும் பாடம் கற்றுக்கொடுப்பதற்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். ஜே.என்.யு.வில் தமிழக மாணவர்களை கோழைத் தனமாக தாக்கியதோடு பெரியார், காரல், மார்க்ஸ் ஆகிய தலைவர்களின் படத்தை அடித்து நொறுக்கியுள்ள ஏபிவிபி அமைப்பினர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
பல்கலைக் கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜே.என்.யு பாதுகாவலர்களும் டெல்லி போலீசாரும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழக மாணவர்களின் பாதுகாப்பை பல்கலைக் கழக துணைவேந்தர் உறுதி செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் பதிவுக்கு ஏபிவிபி ட்விட்டரில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், `ஜேஎன்யுவில் நடந்த சம்பவத்தைப் பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருப்பது போல, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் பரிதாப நிலை குறித்தும் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை. ஜேஎன்யுவில் சத்ரபதி சிவாஜி படம் மட்டும்தான் அர்பன் நக்சல்களால் சேதப்படுத்தப்பட்டது` என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது.
பெரியார் கருத்தரங்கு
பாதிக்கப்பட்ட மாணவரான நாசரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடந்தவற்றை கேட்டறிந்து நலம் விசாரித்துள்ளார். விரைவில், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலினும், திமுக மாணவரணி செயலாளர் எழிலரசனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதே இடத்தில் பெரியார்
நேற்று மாலை திமுக எம்.பி. செந்தில்குமார், ஜே.என்.யு பல்கலைக் கழகத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து புதிய பெரியார் படத்தை கொடுத்தார். அப்படம் டெப்லாஸ் அறையில் ஏற்கனவே பெரியார் படம் இருந்த இடத்தில் மாட்டப்பட்டது.
தொடர்ந்து செந்தில்குமார் எம்.பி. நாசர் உள்ளிட்ட மாணவர்களுடன் சென்று துணைவேந்தர் சாந்திஸ்ரீயை சந்தித்து, தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இது முதன்முறையல்ல!
கடந்த மாதம் ஜே.என்.யு மாணவர் சங்க அலுவலகத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்ட போது ஏபிவிபி அமைப்பினர் கல்லெறிந்ததாக குற்றசாட்டு எழுந்தது.
பிப்ரவரி 2022 இல், பல்கலைக் கழகத்தில் ராம நவமியின் போது அசைவ உணவு வழங்கப்பட்டதற்கு எதிராக வலதுசாரி குழு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டதால் ஆறு மாணவர்கள் காயமடைந்தனர்.
2020 ஜனவரியில் முகமூடி அணிந்த கும்பல் ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஒய்ஷி கோஷ் உள்ளிட்ட பல மாணவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகமான ஜே.என்,யு.வில் இதுபோன்று தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பிரியா
எல்லா இடங்களிலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா… ஸ்ரீதேவி மகள் உருக்கம்!
சிவசேனா சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரேவின் பாயின்ட்டுகள்! அதிமுகவிலும் இது நடக்கலாம்!