அரிசிக்கு ஜி.எஸ்.டி. கிடையாது – நிர்மலா சீதாராமன்

அரசியல்

‘அரிசி உள்ளிட்ட சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 29ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், அரிசி, கோதுமை, தானியங்கள், மீன் இறைச்சி, வெல்லம், அப்பளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதாவது பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பால், தயிர், மோர், பன்னீர் போன்ற பல்வேறு பொருட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. தற்போது இவற்றுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேலும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் இல்லாத அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு முதல்முறையாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. அதன்படி, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்கள் ஜூலை 18 (நேற்று) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அரிசி, பருப்பு மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பால், பொருள்களின் விலை உயரும் வாய்ப்பு உருவானது. மேலும், ஏழை எளிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், இந்த வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து, ‘சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 19) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது, எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் எனவும் அதில் பட்டியலிட்டுள்ளார். அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *