டெல்லியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்து தேவேந்திர மால்வியா ‘டெல்லி 2020’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தநிலையில், ‘டெல்லி 2020’ படத்தின் ரிலீஸை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 26) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனுசிங்வி, “சமூகத்தைப் பிளவுபடுத்தவும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தவும் வகுப்புவாத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட படங்களை பாஜக விளம்பரப்படுத்துகிறது. பாஜகவுக்கு தங்களது வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரத்தின் மீது நம்பிக்கை இல்லையா?
இந்த படத்தை பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக தேசிய ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா ‘டெல்லி 2020’ படத்தின் டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
படத்தின் டிரெய்லரில் டெல்லியில் நடந்த கலவரம் மிகைப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பாஜக மீண்டும் மத சிறுபான்மையிரை டார்கெட் செய்கிறது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டது ஏன்?
2019-ஆம் ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தேர்தலுக்கு முன்பாக வெளியிட பாஜக திட்டமிட்டது. இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தை நாடினோம். எங்களது தலையீட்டின் காரணமாக, படத்தின் வெளியீட்டை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
‘டெல்லி 2020’ படத்தை தேர்தலுக்கு முன்பாக வெளியிடுவது என்பது, ஒரு குறிப்பிட்ட மத சமூகத்திற்கு எதிராகவும், பொது அமைதியை சீர்குலைப்பதற்குமான பாஜகவின் முற்சியாகும்” என்று தெரிவித்தார்.