திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.எல்.ஏ, , எம்.பி. யெல்லாம் அவர்களுக்குப் பிறகுதான். ஒரு மாவட்டத்துக்கு ஆட்சி ரீதியான தலைவர் கலெக்டர் என்றால், கட்சி ரீதியான தலைவர் மாவட்டச் செயலாளர்தான். அன்பில் தர்மலிங்கமும் அன்றைய திருச்சி மாவட்ட கலெக்டரும் மோதிக் கொண்டதை இதற்கு உதாரணமாக திமுக சீனியர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் இது முற்றிலும் மீறப்பட்டு விட்டதாகவும் நெல்லையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வஹாப் முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டதாகவும் குமுறுகிறார்கள் நெல்லை திமுகவினர்.
நெல்லை மாநகர புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் ஆகஸ்டு 10 ஆம் தேதி காலை நெல்லை மாநகராட்சியில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்வில் நெல்லை மாநகராட்சியை உள்ளிடக்கிய மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கான், நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், அணிகளின் மாநில துணைச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், பேச்சி பாண்டியன், வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த் உள்ளிட கட்சி நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. காரணம் அவர்கள் அழைக்கப்படவில்லை.
மாறாக நெல்லை மாநகராட்சிக்கு வெளியே இருக்கும் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் ஆகியோர் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவின் போது கிங் மேக்கர் அப்துல் வஹாப் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.
மேயர் பதவியேற்பு நிகழ்வுக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்ததே அப்துல் வஹாப்தான். பதவியேற்பு நிகழ்ச்சி, அதற்குப் பிறகான மேயரின் விருந்து நிகழ்ச்சி ஆகியவற்றை முன்னின்று நடத்தியதும் வஹாப்தான்.
இதனால் நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கான், மாநகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகிறார்கள் திமுக நிர்வாகிகள்.
இதுகுறித்து நெல்லை திமுக வட்டாரங்களில் பேசினோம்.
“ நெல்லை மேயராக ஏற்கனவே இருந்த சரவணன் அப்போதைய மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்பின் பாக்கெட்டில் இருந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்குமான மோதலால்தான் நெல்லையில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே கலகம் செய்தனர். புதிய மேயராக கிட்டு ராமகிருஷணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய மேயரும் முழுக்க முழுக்க அப்துல் வஹாப்பின் ஆள்தான். ஆனாலும் அவரை எதிர்த்து 23 கவுன்சிலர்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். அவர்கள் மேயர் தேர்தலில் வஹாப்பின் தலையீட்டை எதிர்த்து பவுல்ராஜ் தலைமையில் தனி அணியாக சென்றிருக்கிறார்கள்.
மேயர் தேர்தலுக்கு முன்பே மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கானிடம் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மேயர் வேட்பாளர் பற்றி எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. கவுன்சிலர்களில் பலர் அப்துல் வஹாப்பின் ஆட்கள் என்பதால் மைதீன் கானும் இதில் பெரிதாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நெல்லை மேயர் வேட்பாளராக ஆகஸ்டு 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டார் கிட்டு ராமகிருஷ்ணன். திமுகவில் மரபு மற்றும் விதிமுறை என்னவெனில் முதலில் மாவட்டச் செயலாளாரை சந்தித்து வாழ்த்து பெறுவது, அவர் மூலமாக தலைவரை சென்று சந்திப்பதுதான்.
ஆனால் அப்துல் வஹாப்பின் தீவிர ஆதரவாளரான கிட்டு ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஏழு நாட்கள் கழித்து, அதாவது ஆகஸ்டு 10 ஆம் தேதி இரவுதான் மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கானை சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இத்தனைக்கும் இதற்கு முன்பே புதிய மேயர் சென்னை சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கூட அவர் வஹாப்புடன் தான் சென்னை சென்றார். முதல்வரை சந்திக்கும்போது சம்பிரதாயத்துக்காக மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கான் இருந்தார்.
இந்த சந்திப்பு முடிந்து, மேயராக பதவியேற்பதற்கு முதல் நாள் ஆகஸ்டு 10 ஆம் தேதிதான் கிட்டு ராமகிருஷ்ணன் மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கானை சென்று சந்திக்கிறார். என்னதான் கோஷ்டி அரசியல் செய்தால் கூட இத்தனை நாட்கள் கழித்தா மாவட்டப் பொறுப்பாளரை சந்திப்பது? அதுவும் சென்னையில் இருந்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிந்துகொண்ட பிறகுதான் மாவட்டப் பொறுப்பாளரையே சந்தித்துள்ளார் மேயர். இது எல்லாம் வஹாப் செய்யும் வேலைதான்.
இதுமட்டுமல்ல.. ஆகஸ்டு 11 ஆம் தேதி மேயர் பதவி ஏற்பு விழாவுக்கு கட்சி நிர்வாகிகளை அழைக்க வேண்டியது மாவட்டப் பொறுப்பாளர்தான்.
ஆனால் அவருக்கு முன்பே பாளையங்கோட்டை எம்.எல்.ஏ. அப்துல் வஹாப் , மேயர் பதவியேற்பு விழாவில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து கடிதம் எழுதுகிறார். இது திமுகவில் மிகவும் புதிது. வஹாப்பின் கட்சி விதிகளை மீறிய செயல்பாட்டை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் கண்டித்து ஓர் அறிக்கையே வெளியிட்டார்.
‘கழக அமைப்பு ரீதியாக உள்ள மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகளுக்கு முறையான தகவல்கள், அறிவிப்புகள் முறைப்படி மாவட்டப் பொறுப்பாளர், மாநகர செயலாளரிடம் இருந்து வருவதை மட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினருக்கோ, நாடாளுமன்ற உறுப்பினருக்கோ கழக அமைப்பு ரீதியாக தலையிடுவதற்கு கழக சட்ட விதிமுறைகளில் இடமில்லை.
ஆகவே தங்களுக்கு அமைப்பு, நிர்வாக ரீதியாக இடையூறு செய்தால் மாவட்டப் பொறுப்பாளரிடமோ மாநகர செயலாளரிடமோ புகார் அளிக்கலாம்’ என்று நிர்வாகிகளுக்கு அறிவிப்பு செய்திருந்தார் மாநகர செயலாளர் சுப்பிரமணியன்.
இதற்குப் பிறகும் எம்.எல்.ஏ.வான அப்துல் வஹாப்பே மாவட்டச் செயலாளார் போல தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேயர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும் அவர் அறிக்கை விட்டுள்ளார்.
எனவே நெல்லையில் திமுக என்பது திராவிட முன்னேற்றக் கழகமாக இல்லாமல் வஹாப் முன்னேற்றக் கழகமாக இருக்கிறது. மைதீன் கான் என்ற தனி நபரை இது இழிவுபடுத்தும் வகையில் இல்லை, கட்சி அமைப்பையே கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.
இவ்வளவு நடந்தும் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஏதும் உருப்படியாக செய்யவில்லை. மைதீன் கான் இடத்தில் இந்நேரம் இன்னொரு மாவட்டப் பொறுப்பாளர் இருந்திருந்தால் தமிழ்நாடு பூராவும் கட்சி பெயர் டேமேஜ் ஆகும் வகையில் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் மைதீன் கான் அதை பொறுமையாக தவிர்த்து வருகிறார்” என்கிறார்கள் நெல்லை திமுக நிர்வாகிகள்.
இதுகுறித்து மத்திய மாவட்டப் பொறுப்பாளார் மைதீன் கானிடம் பேச முயன்றோம். நம்மிடம் பேசிய அவருக்கு நெருக்கமானவர்கள்,
“மைதீன் கான் மாவட்டப் பொறுப்பாளர் பதவி வேண்டும் என்று தலைவரிடம் கேட்டு வாங்கவில்லை. அவருக்கு இப்பதவியில் தொடர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மாவட்டப் பொறுப்பாளரை பதவியேற்பு விழாவுக்கு மேயர் கிட்டு ராமகிருஷ்ணன் அழைக்கவில்லை. இத்தனைக்கும் மேயர் பதவியேற்பு நடந்த அதேநேரத்தில்… மாநகராட்சியின் எதிர்ப்புறத்தில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில்தான் மாவட்டப் பொறுப்பாளர் மைதீன் கான் ஒரு நிகழ்வில் இருந்தார். கடைசி நேரம் வரைக்கும் அழைப்பார்கள் என காத்திருந்தார். ஆனால், அழைக்கப்படவே இல்லை. தலைவர் அழைத்துக் கேட்டால், திருநெல்வேலியின் ஒட்டுமொத்த நிலவரத்தையும் எடுத்துச் சொல்ல தயாராக இருக்கிறார். அதுவரை அவராக எந்த புகாரும் செய்வதாக இல்லை” என்கிறார்கள்.
நெல்லை திமுகவில் ஸ்டாலின் அவசர கவனம் செலுத்தவில்லை என்றால்… சட்டமன்றத் தேர்தலில் இதன் எதிரொலி பலமாக இருக்கும் என்கிறார்கள் நெல்லை நிர்வாகிகள்.
–வேந்தன்
சுதந்திர தினவிழா… தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இருசக்கர வாகன பேரணி!
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் புதிய ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா… பார்டரை தாண்டிய நட்பு!