நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை தேசிய பொதுகலந்தாய்வு மூலம் மத்திய அரசே நிரப்புவதற்கான முன்மொழிவை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டிருக்கும் நிலையில் அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், NEXT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 13) கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
”இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசத்தில் உள்ள NEXT என்ற தேசிய மருத்துவ தொகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி உள்ள நிலையில், NEXT தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூக ரீதியான பின்தங்கிய மாணவர்களுக்கும்,
மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் NEXT தேர்வு முறையினை கைவிட வேண்டும் என்றும்,
தற்போதுள்ள முறையை தொடர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
”இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
2011-ல் திமுக ஆட்சியில் 1,945 ஆக இருந்த எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள், 2021-ல் ஜெயலலிதாவின் ஆட்சியில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களையும் சேர்த்து சுமார் 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும்.
இந்நிலையில் , தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல.
இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என்று,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தேசிய மருத்துவக் குழுமத்தை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்!
அண்ணாமலையை வைத்துக் கொண்டு அமித் ஷா பேசியது என்ன? போட்டு உடைத்த சி.வி. சண்முகம்
