மின்சாரத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.
ஜி.எஸ்.டியால் நிதிச்சுமை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், 30ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது.
இதில் தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேச ஆளுநர்களும் கலந்துகொண்டனர். இந்தக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் திருத்த மசோதாவை திரும்ப பெறுக
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் தமிழகம் உறுதியாக இருக்கிறது.
எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் உருவாகும் காற்றாலை மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளது.
தமிழ்நாட்டுக்கு காற்றாலை மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மின்சாரத் திருத்த சட்ட மசோதாவால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.
நீட் விலக்கு மசோதா
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தரவேண்டும்.
வெளிநாடுகளுடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு விதிகளை எளிதாக்கவேண்டும். வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்கவேண்டும்.
தென்னிந்திய முதலமைச்சர்கள் இணையவேண்டும்
அதேபோன்று தென்னிந்திய முதலமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்திட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென்மாநிலங்களில் உளவுத்துறை இணைந்து செயல்படவேண்டும். அடுத்த தென்மண்டல கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் வைத்தார்.
கலை.ரா
ஆங்கிலத்துக்கு பதில் இந்தி: அமித்ஷா பேச்சின் பின்னணி அஜெண்டா!