ஆவுடையப்பனை அதிர வைத்த அப்பாவு: நெல்லை திமுக க்ளைமேக்ஸ்! 

அரசியல்

திமுக உட்கட்சித் தேர்தலின் க்ளைமாக்ஸ் படலமாக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் நேற்று (செப்டம்பர் 22) தொடங்கியிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாவட்டங்கள் என ஒதுக்கப்பட்டு அந்த மாவட்டங்களில் இருந்து  மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் செப்டம்பர் 22 ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான மனு தாக்கல் செய்யும் நாளாகும். இந்த மாவட்டங்களை அடிப்படையாக வைத்து திமுகவில் பரபரப்பான மாற்றங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி  கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் சீனியரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்  செப்டம்பர் 22 ஆம் தேதி தனது ஆதரவாளர்களோடும் நிர்வாகிகளோடும்  மாவட்ட செயலாளர் பதவிக்காக மனு தாக்கல் செய்தார். அதே திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்காக சபாநாயகர் அப்பாவுவின் தீவிர ஆதரவாளரான பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளரும் ஒன்றிய சேர்மனுமான  தங்கபாண்டியன் தனது ஆதரவாளர்களோடு வந்து மனு தாக்கல் செய்தார்.

ஆவுடையப்பனின் வயது மற்றும் கட்சி அனுபவம், வழக்கறிஞர் தொழில் நிபுணத்துவம், ஆங்கில அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரை  மாநில சட்டத்துறைக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் என தகவல்கள் பரவின. இதை உறுதிப்படுத்துவது போல திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்கு மாவட்டச் செயலாளராக  ஆவுடையப்பனுக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு தனது ஆதரவாளரை கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்து வந்தார்.

ஆவுடையப்பன் சில நாட்களுக்கு முன் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டார்.  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் அவரிடம், ‘உங்களை தலைவர் சட்டத்துறைக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறார்’ என்று சொன்னதும் ஆவுடையப்பன் அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை நேரடியாக சந்தித்த அவர் கண் கலங்கி அழுதார் என்றும் அதனால்  ஸ்டாலின் சமாதானமாகிவிட்டார் என்று ஆவுடையப்பனே  தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னதை மின்னம்பலத்தில்  ஸ்டாலினிடம் தேம்பித் தேம்பி அழுத மாவட்டச் செயலாளர் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் செப்டம்பர் 22 ஆம் தேதி தற்போதைய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் மனு தாக்கல் செய்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவின் தீவிர ஆதரவாளரும், பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளருமான தங்கபாண்டியன் மாவட்டச் செயலாளர் பதவிக்கு தன் ஆதரவாளர்களோடு வந்து மனு தாக்கல் செய்தார். இது ஆவுடையப்பனை அதிர வைத்துள்ளது. அப்படியென்றால் இன்னும் தனது பஞ்சாயத்து தீரவில்லையா என்று அவர் மீண்டும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

இதுவரை அப்பாவு ஆவுடையப்பனோடு நேரடியாக மோதல் அரசியலை நடத்தியதில்லை. சபாநாயகர் என்ற பதவியில் இருப்பதால் அந்த பதவிக்கேற்ற வரைமுறைகளோடு மாவட்ட அரசியலில் நேரடியாக மூக்கு நுழைக்காமல் இருந்தார் அப்பாவு. ஆனால் நேற்று காட்சிகள் மாறின. ஆவுடையப்பனுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் தங்கபாண்டியனும் அவரது ஆதரவாளர்களும்  கிரீன்வேஸ் இல்லத்தில் இருக்கும் சபாநாயகரின் குறிஞ்சி இல்லத்துக்கு சென்றனர். அங்கே சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வணங்கி ஆசிபெற்றனர். அதன் பிறகே அறிவாலயத்துக்கு  சென்று மனு தாக்கல் செய்தனர்.

இதன்மூலம் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை  ஆவுடையப்பனிடம் இருந்து கைப்பற்ற சபாநாயகர் அப்பாவு நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார் என்பதும், கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒப்புதல் இல்லாமல் இதுபோல் அப்பாவு செயல்பட வாய்ப்பில்லை என்றும் நெல்லை மாவட்ட திமுகவில் நேற்று முதல் பேச்சுகள் அதிகரித்து வருகின்றன.

“2021 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரத்தில் திமுக சார்பாக போட்டியிட்ட அதிகாரபூர்வ வேட்பாளர் அப்பாவுக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த அதிருப்தி வேட்பாளராக வீனஸ் வீர அரசு என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அந்த வீனஸ் வீர அரசுவை இப்போதைய உட்கட்சித் தேர்தலில் அப்பாவுவின் ராதாபுரம் ஒன்றியத்தில் அவைத் தலைவர் பதவியில் உட்கார வைத்துள்ளார் ஆவுடையப்பன். இதனால் கடும் கோபம் அடைந்த அப்பாவு, மாவட்டச் செயலாளர் பதவியையே நாங்கள் கைப்பற்றிக் கொள்கிறோம் என முடிவெடுத்துவிட்டார். இதுபோல் பல விளையாட்டுகளை நடத்தியுள்ளார் ஆவுடையப்பன். நாங்கள் இந்த உட்கட்சித் தேர்தலில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம். எங்களுக்கு கட்சிதான் முக்கியம்” என்கிறார்கள் அப்பாவு ஆதரவாளர்கள்.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஆவுடையப்பன் தரப்பையும், அப்பாவு ஆதரவு பெற்ற தங்கப்பாண்டியன் தரப்பையும் அழைத்து அறிவாலயத்தில் பஞ்சாயத்து பேசுகிறார்கள் என்பதே லேட்டஸ்ட் நிலவரம்! 

வேந்தன் 

டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்: சபரீசன் புது செக்!

+1
2
+1
4
+1
3
+1
2
+1
3
+1
2
+1
1