தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. ஹேப்பி தீபாவளியை ஆவின் இனிப்புகளோடு கொண்டாடுங்கள் என்றும் ஆவின் வேண்டுகோள் வைக்கிறது.
ஆனால் ஆவினுக்கு மட்டும் ஹேப்பி தீபாவளி இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி.
இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 20) தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு ஒன்றியங்களில் ஐந்து வாரகாலத்திற்கு மேல் பணப்பட்டுவாடா செய்யப்படாமல் சுமார் 400கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ள நிலையில்,
ஒவ்வொரு ஒன்றியங்களிலும் பல்வேறு கல்வி, தொழில் நிறுவனங்களுக்கும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்த வகையில் ஆவினுக்கு வர வேண்டிய பலகோடி ரூபாய் வசூல் செய்யப்படாமல் வாராக்கடனாக விட்டு வைத்திருப்பதும்,
ஆவின் நிர்வாகம் தரப்பில் அதனை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக கோவை ஒன்றியத்தில் மட்டும் 31.03.2022 கணக்கின்படி பல்வேறு கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்த வகையில் கடந்த 3வருடமாக சுமார் 4கோடியே 45லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படாமல் தற்போது வரை அந்த தொகை நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி நிலுவையில் மூன்றாண்டுகளாக வாராக்கடனாக இருக்கும் 4கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்த தொகையை வசூலிக்க தற்போதைய பொது மேலாளர் ராமநாதன் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள், இணையத்தில் தீபாவளிக்கு சுமார் 270 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் இலக்கு நிர்ணயம் செய்திருப்பதால்,
50லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யும் பால் முகவர்களையும், ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களையும், அவ்வளவு ஏன் பால் விநியோகம் செய்யும் வாகன ஒப்பந்ததாரர்களையும் கூட விட்டு வைக்காமல்,
ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50 கிலோ ஆவின் தீபாவளி இனிப்புகள் வாங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு வருவதால் ஒவ்வொருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கோவை ஒன்றிய ஆவினில் பால் மற்றும் பால் பொருட்கள் கொள்முதல் செய்யும் பால் முகவர்கள் அதற்குரிய தொகையை செலுத்த பயன்படுத்தி வந்த இணையதள வசதியை தீபாவளி இனிப்புகள் விற்பனை செய்ய நிர்பந்தம் செய்வதற்காக,
20ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயன்படுத்த முடியாமல் ஆவின் நிர்வாகம் முடக்கி வைத்து விட்டு ஒவ்வொரு பால் முகவர்களும் நேரில் வந்து தான் பணம் செலுத்தி ஆர்டர் போட வேண்டும் என குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளனர்.
தீபாவளி இனிப்புகள் விற்பனை செய்ய நிர்பந்தம் செய்யும் ஆவின் நிர்வாகத்தின் இந்த சுயநலமிக்க செயல்பாடுகளால் பால் முகவர்கள் மட்டுமின்றி பால் உற்பத்தியாளர்கள், விநியோக வாகன ஒப்பந்ததாரர்கள் என பல்வேறு தரப்பினரும் கோவை ஒன்றியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கோவை ஒன்றியத்தில் விரிவாக்க அலுவலராக 15ஆண்டுகள், மேலாளராக 15ஆண்டுகள் என சுமார் 30ஆண்டுகாலமாக பணியாற்றி வருபவரும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் (2கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டியுள்ளது), கோவை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளுக்கு மூலக்காரணியாக இருப்பதாக கூறப்படுபவருமான அதிகாரியை….
பணிமாறுதல் என்கிற பெயரில் பொதுமேலாளர் ராமநாதன் அவர்கள் தனக்கு அருகில் வைத்துக் கொண்டு தங்களின் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காத நேர்மையான அதிகாரிகளை பலிகடா ஆக்குவதாக கோவை ஒன்றியத்தில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளும், ஆவின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
எனவே கோவை ஒன்றியத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்து கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வசூலாகாமல் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ள பிரச்சினையில் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுக்கும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கி விட்டு,
அதற்கான தொகையை வசூலிக்காமல் அப்போது பணியில் இருந்து மாறுதலான, தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் எவராக இருந்தாலும் அவர்களின் ஊதியத்தில் அதற்கான தொகையை பிடித்தம் செய்து ஆவினுக்கான வாராக்கடனை நேர்செய்ய நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிடுமாறு,
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார் பொன்னுசாமி.
-வேந்தன்
ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 45 ஆக உயர்வு!