ஆவின் இனிப்பு விலை உயர்வை திரும்ப பெறுக : பன்னீர்

Published On:

| By Kavi

ஆவின் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் நிறுவனம் இனிப்பு வகைகளின் விலையை  20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், “ஆட்சியைப் பிடிப்பதற்காக நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி,

“சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம்” என்ற வீர வசனத்தை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த தி.மு.க.,

“சொன்னதை செய்யமாட்டோம், சொன்னதற்கு முரணாக நடப்போம்” என்ற வழியில் “மக்கள் விரோத மாடல்” ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

மின் கட்டணம், நீட் தேர்வு, சொத்து வரி, நகைக்கடன் என அனைத்து பிரச்சினைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், ”ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், அந்த இழப்பை சரிகட்டும் வகையில், ஆவின் பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் வகைகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன.

உதாரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அரை லிட்டர் தயிரின் விலை 27 ரூபாய், அதாவது ஒரு லிட்டர் 54 ரூபாய் என்றிருந்தது. இன்றைக்கு அதே தயிர் அரை லிட்டர் 35 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 515 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு அந்த நெய்யின் விலை 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

80 ரூபாயாக இருந்த 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறிய ஐஸ்க்ரீம் விலைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன.

aavin sweets price hike o panneer selvam condemns

இதற்குக் காரணம் கேட்டால் ஜி.எஸ்.டி. என்று தி.மு.க. அரசு விளக்கம் தரும். ஆனால், அதையும் தாண்டி விலை உயர்த்தப்பட்டது என்பதுதான் யதார்த்தம்.

இதற்கிடையில் எடை குறைப்பு வேறு!இது போதாது என்று, தீபாவளிப் பண்டிகை வர இருக்கின்ற இந்தத் தருணத்தில், ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், பேரிச்சை கோவா அரை கிலோ 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பாக்கு 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

‘திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொண்டு மக்களை வஞ்சிக்கின்ற தி.மு.க. அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆவின் பொருட்களின் விலை உயர்வினை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியினால் ஏழையெளிய மக்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்கள். எனவே, மக்களை வாட்டி வதைக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், மக்கள் வடிக்கும் கண்ணீர் தி.மு.க. ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

சவுக்கு சங்கருக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் பிரசாந்த் பூஷன்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! : தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது!