ஆவின் பால் தட்டுப்பாடு : முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை!

அரசியல்

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு மற்றும் பால் உற்பத்தி குறைவு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பால் வளத் துறை அமைச்சர் நாசர் இன்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சமீப நாட்களாகப் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகத்துக்குக் கிடைக்கக் கூடிய பால் அளவு குறைந்ததால் பால் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேசமயம் தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனத் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

ஆவினில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 31 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுவே தனியார் நிறுவனங்கள் ரூ.42 வரை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன.

இதனால் ஆவினிலும் பசும்பால் விலையை 42 ரூபாயாகவும், எருமைப் பால் விலையை 51ரூபாயாகவும் உயர்த்தி தரவேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத் துறை அமைச்சர் நாசர், “பால் தட்டுப்பாட்டைப் போக்கப் பால் உற்பத்தியாளர்களுடன் மார்ச் 16ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களின் கோரிக்கைகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

“அண்டை மாநிலத்திலிருந்து வந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்த 2 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் நாசர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

பால் தட்டுப்பாடு மற்றும் பால் விலையை உயர்த்த கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்தது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

முதல்வருடனான ஆலோசனையைத் தொடர்ந்து அமைச்சர் நாசர் பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரியா

மகப்பேறு விடுமுறையில் சென்ற பெண்ணை நீக்கிய மெட்டா!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *