மாநில பாஜகவின் முக்கிய நிர்வாகியும், அக்கட்சியின் எம்.எல்.ஏ மருமகனுமான அஷோக் குமார், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (நவம்பர் 21) அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில பாஜக ஓபிசி அணியின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தவர் ’ஆற்றல் அஷோக் குமார்’ என்றழைக்கப்படும் அசோக் குமார்.
இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசனை தோற்கடித்து கவனம் பெற்ற பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்.
பாஜக – அதிமுக கூட்டணி இருந்த நிலையில் ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மருமகன் அசோக்குமாருக்கு பெற்றுத் தர எம்.எல்.ஏ. சரஸ்வதி முயற்சித்து வந்தார். இதனை அசோக்குமாரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு குறைந்தது. மேலும் சமீபகாலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அசோக் குமாருக்கு கருத்து வேறுபாடும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் அசோக் குமார்.
ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியும், பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருகனுமான அசோக்குமார் அதிமுகவில் இணைந்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த அசோக் குமார்?
ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா புதுப்பாளையத்தில் பிறந்தவர் அசோக் குமார். இவரது தாயார் கே.எஸ். சவுந்தரம் அன்றைய திருச்செங்கோடு (இன்றைய ஈரோடு) மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் 1991ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான கருணாம்பிகா குமாரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
‘ ஆற்றல் அசோக் குமார்’ என அடைமொழியுடன் ஈரோடு வட்டாரத்தில் அறியப்படுபவர் அசோக் குமார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆற்றல் என்ற பெயரில் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகிறார். இதுமட்டுமின்றி டிப்ஸ் கலை அறிவியல் கல்லூரி, டிப்ஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், டிப்ஸ் ஸ்கூல் ஆப் ஆர்கிடெச்சர், தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட், தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் அசோக் குமார் நடத்தி வருகிறார்.
முன்னதாக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட், இன்டெல், ஜெராக்ஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களில் அசோக் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
பிக்பாஸ்: ஜோவிகாவிற்கு சீக்ரெட் மெசேஜ் அனுப்பிய வனிதா விஜயகுமார்?
இது தான் எடப்பாடி சொன்ன மாபெரும் கூட்டனி போலருக்கு! 😋