ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆர்.கே.சுரேஷிற்கு அனுப்பிய சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை நீதிபதி இன்று (ஏப்ரல் 21) நிராகரித்தார்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.2438 கோடி மதிப்பிலான பணத்தை பெற்று ஏமாற்றியதாக புகார்கள் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக நடிகரும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கு பணம் கொடுத்ததாக காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆர்.கே.சுரேஷிற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். காவல்துறை விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக ஆர்.கே.சுரேஷ் துபாய் தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “படத்தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ என்னை அணுகினார். அதுதொடர்பாக மட்டுமே அவருடன் பணப்பரிவர்த்தனை நடைபெற்றது. என்னுடைய மனைவி, குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கில் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடிக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று வாதம் செய்தார்.
நீதிபதி சந்திரசேகரன், “ஆவணங்களுடன் ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட சம்மனில் எந்த மாதிரியான ஆவணங்கள் என்ற விவரங்கள் இல்லாததால் சம்மனை ரத்து செய்ய போகிறோம். தேவையான விவரங்களுடன் புதிய சம்மனை ஆர்.கே.சுரேஷிற்கு அனுப்புங்கள்” என்று தெரிவித்தார்.
அதற்கு காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, “காவல்துறை ஆர்.கே.சுரேஷிற்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டாம். இந்த சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவல்துறை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யும் வரை ஆர்.கே.சுரேஷ் சம்மனை தடை செய்ய வேண்டும் என்று அவரது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
செல்வம்
மன்னிப்பு கேட்க முடியாது: தி.மு.க நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்!
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள்: ஓபிஎஸ் வாதம்!