ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் ஆஜராக சம்மன்!

அரசியல்

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலை பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.25 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

பொதுமக்களுக்கு வட்டி மற்றும் முதலீட்டை வழங்காமல் ரூ.2,438 கோடி ரூபாயை மோசடி செய்தனர்.

இந்த மோசடி வழக்கில் 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.96 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு இயக்குநர்கள் ராஜசேகர், உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், ரமேஷ்குமார், நாராயணி ஆகியோர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்கள் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ என்பவரை கடந்த டிசம்பர் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மோசடி வழக்கை மத்திய பாஜக அரசின் உதவியுடன் முடக்குவதற்காக ஆர்.கே.சுரேஷுக்கு ரூ.15 கோடி கொடுத்துள்ளதாகவும் பணத்தை பெற்றுக்கொண்ட ஆர்.கே.சுரேஷ் இடைத்தரகர்கள் உதவியுடன் வழக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த அவரை தொடர்புகொண்டபோது அவர் துபாய்க்கு தப்பி சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகாமல் தனது வழக்கறிஞர் மூலமாக விளக்கங்களை சமர்ப்பித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

செல்வம்

பல் பிடுங்கிய விவகாரம்: யாரும் ஆஜராகவில்லை!

கலாஷேத்ரா: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0