பொது சிவில் சட்டம் : ஆம் ஆத்மி ஆதரவு!

Published On:

| By Kavi

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று (ஜூன் 27) பேசிய பிரதமர் மோடி, “ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஒரு சட்டம் இன்னொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால் அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது.

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி வருகிறது.

ஆனால் வாக்கு வங்கி அரசியலில் உள்ளவர்கள் இந்த சட்டத்தை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்று கூறியிருந்தார்.

இதற்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் கடந்த ஜூலை 22 ஆம் தேதி நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.

ஆம் ஆம்தி கட்சியின் பொதுச் செயலாளர் சந்திப் பதக் இது தொடர்பாக கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவும் அதை ஆதரிக்கிறது.

இது போன்ற பிரச்சினைகளில் நாம் ஒருமித்த கருத்துடன் செல்ல வேண்டும் என்று நம்புகிறேன்.

எனவே அனைத்து மதத்தினரிடமிருந்தும் அரசியல் கட்சியினிடமிருந்தும் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனைகளை பெற்று ஒருமித்த கருத்தோடு முன்னோக்கி செல்ல வேண்டும்.

ஒருமித்த கருத்து இல்லாமல் இதை செயல்படுத்த முடியாது. இந்த பிரச்சனையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் அவசியம் என்று நேற்று பிரதமர் மோடி கூறியதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாமியத் உலமா – இ- ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அது போன்று, நாட்டில் நீடிக்கும் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மணிப்பூர் வன்முறை ஆகியவற்றையெல்லாம் பேச பிரதமர் மோடி தயாராக இல்லை.

இந்த பிரச்சினைகளிலிருந்து நாட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் பொது சிவில் சட்டம் குறித்து பேசி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வரும் ஆம் ஆத்மி, பொது சிவில் சட்டத்தில் பாஜக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

முதலமைச்சர் கோப்பை: பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த உதயநிதி

சோழர் தேசத்தில் சீனப் பொருட்கள் கண்டெடுப்பு : அமைச்சர் தகவல்!

Uniform Civil Code
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel